குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கலோரி குறைக்கும் காளான்!
உடல் பருமனை, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது, நார்ச்சத்து. காளானில், பீட்டா குளூக்கோஸ் மற்றும் சிட்டின் என, இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன; காளான் குறைந்த கலோரி உடையது. இதை, உணவில் அதிக அளவில் சேர்க்கும் போது, வழக்கமாக சாப்பிடும் மற்ற உணவை, வழக்கத்தை விடவும், குறைந்த அளவு சாப்பிட்டாலே, இந்த இரண்டு நார்ச்சத்துக்களும் பசியைக் குறைத்து, நிறைவாக சாப்பிட்ட உணர்வை தருகின்றன. காளான், மிக மெதுவாக செரிமானம் ஆவதால், நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு தெரிவதில்லை; குறைந்த அளவு கலோரியே போதுமானதாக உள்ளது. தினசரி உணவில், பெண்களுக்கு, 21 முதல், 25 கிராமும், ஆண்களுக்கு, 30 முதல், 38 கிராம் வரையும் நார்ச்சத்து தேவைப்படுகிறது.அதிகபட்சமாக, 100 கிராம் காளானில், 11.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. காளானின் வகைக்கு ஏற்ப, அதில் உள்ள நார்ச்சத்தின் அளவு மாறுபடும். காளானில் உள்ள பீட்டா குளுக்கோஸ், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்; இதனால், உடல் எடை அதிகரிக்கும் அபாயம் குறைவு. புரதம் அதிகம் உள்ள உணவு. உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள், உணவில் நிறைய காளான் சேர்த்துக் கொள்வது, நல்ல பலனைத் தரும்.சுபத்ரா சுந்தர், ஊட்டச்சத்து நிபுணர், கோவை.