இடது கையும், தோள்பட்டையும் வலிக்கிறது...
ஆர். பாரதி, காரைக்குடி: எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. நான் வேலை செய்யும் அலுவலகம் மாடியில் உள்ளது. ஒருநாளில் 2 முறை ஏறி இறங்க வேண்டியுள்ளது. நான் தொடர்ந்துவேலைக்கு செல்லலாமா?மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மீண்டும் அது ஏற்படாமல் இருக்க, வாழ்க்கை முறை மாற்றம் செய்வது அவசியம்.இத்துடன் வாழ்நாள் முழுவதும் அவசியம் மருந்து, மாத்திரைகள் தேவைப்படும். 'ஸ்டென்ட்' பொருத்தியவர்களுக்கு மருந்து மாத்திரை மிகவும் அவசியம்.வேளை தவறாமல் அதை எடுக்க வேண்டும்.இருதய நோயாளிகள் உடலளவிலும், மனதளவிலும் மிக நிதானமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு, 'எக்கோ' பரிசோதனை, 'டிரெட் மில்' பரிசோதனை அவசியம் தேவை. இவற்றின் முடிவுகள் நார்மலாக இருந்தால், நீங்கள் தாராளமாக மாடிப்படி ஏறலாம். மெதுவாக சில படிகள் ஏறி நின்று, நிதானமாக அடுத்து தொடர வேண்டும். எதிலும் வேகம் காட்டுவது நல்லதல்ல. நீங்கள் தாராளமாக பணியை தொடரலாம்.இ.தம்மணன், திண்டுக்கல்: எனக்கு 64 வயதாகிறது. மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது. இதற்கு, 'அம்லோடிப்பின், அட்டினலால்' (Amlodipine, Atenolol) என்ற இரண்டு மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். இவற்றை தொடரலாமா?ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இரண்டு வியாதிகளுமே ரத்தக்குழாயை கொடூரமாக பாதிக்கும் நோய்கள். சர்க்கரை நோய் உள்ள ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கு, 'அட்டினலால்' எடுப்பது தவறு. உடனடியாக அதை நிறுத்திவிட்டு, வேறு ரத்தக் கொதிப்பு மாத்திரையை எடுப்பது நல்லது. இதற்கு டாக்டரின் ஆலோசனையை பெற்று செயல்படுத்தவும். 'அட்டினலால்' மாத்திரை, ரத்தக்கொதிப்புக்கு நல்லதல்ல என இப்போதைய மருத்துவ வழிகாட்டிகள் தெரிவிக்கின்றன.இரண்டு நோய்களுக்கும் வாழ்க்கை முறை மாற்றம், நல்ல உடற்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுப்பது முக்கியம்.ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி:கருவில் உள்ள சிசுவின் இருதயம் நன்கு செயல்படுகிறதா என கண்டறிய, எவ்வகை சோதனை முறை உள்ளது?தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். 'பீட்டல் எக்கோ' (Fetel Echo) பரிசோதனையில் கருவில் உள்ள சிசுவின் இருதயத்தின் செயல்பாட்டையும், வேறு ஏதேனும் ஓட்டை உள்ளதா, குறைபாடு உள்ளதா என, எளிதில் கண்டறியலாம்.இப்பரிசோதனை முடிவை பொறுத்தே, இருதய, மகப்பேறு நிபுணர்கள் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பர்.பி.சிவலிங்கம், உத்தங்குடி: நான் ஒரு சர்க்கரை நோயாளி. எனது இடது கை தோள் பட்டையில், வலி உள்ளது. நான் என்ன செய்வது?இடது கையிலோ, தோளிலோ வலி ஏற்படுவது, இருதயத்தின் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும். எனவே உடனடியாக டாக்டரிடம் சென்று, 'எக்கோ' பரிசோதனை, 'டிரெட்மில்' பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும்.இதில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், உங்களுக்கு, 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை தேவைப்படும்.இருமுடிவுகளும் நார்மலாக இருந்தால், சர்க்கரை நோயால் தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். இதற்கு, 'பிசியோதெரபி' பயிற்சிகள் மற்றும் லேசான வலிமாத்திரைகளைஎடுத்தால் போதுமானது.- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.