மனசே மனசே குழப்பம் என்ன!: அவசரம் என்னை அச்சப்படுத்துகிறது!
முன்னுாறு ஆண்டுகளுக்கு முன், கேரளாவில், நகைச்சுவையாக எழுதக் கூடிய கவிஞர், குஞ்சன் நம்பியார் என்பவர் இருந்தார். அவர் எழுதிய, ஒரு குட்டிக் கதை எனக்கு மிகவும் விருப்பம்.ஒரு நாள், ஒரு பெண் வீட்டிற்கு, காலை வேளையில் சென்றார். அந்தப் பெண், பிரார்த்தனை செய்யும் நேரம் அது. ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்தார். கவிஞர், ஒரு குழியை தோண்டினார். பெண், சிறிது நேரத்திற்கு, சிவ நாமம்; அதன்பின், விநாயகர், கிருஷ்ணர் என்று குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு தெய்வத்தின் பெயரையும் சொல்லி கொண்டிருந்தார். ஒவ்வொரு கடவுளின் பெயரைச் சொல்லும் போதும், கவிஞர் ஒரு குழியைத் தோண்டினார்.எல்லாம் முடிந்து, அந்தப் பெண் வந்தபோது, அரைகுறையாக தோண்டிய நான்கைந்து குழிகள் இருந்தன. 'என்ன இது?' என்று அந்தப் பெண் கேட்க, 'நீங்கள் ஒவ்வொரு கடவுளின் பெயரைச் சொல்லும போதும், ஒரு குழியைத் தோண்டினேன்.'பதிலாக ஒரே கடவுளின் பெயரை இத்தனை நேரமும் சொல்லியிருந்தால், நானும் ஒரு குழியை ஆழமாகத் தோண்டிஇருப்பேன். இதற்குள் தண்ணீர் வந்திருக்கும்' என்றார்.'தினமும் இப்படித்தான் சொல்கிறேன். தினமும் தோண்டினால் நான்கு குழிகளில் இருந்தும் தண்ணீர் வருமல்லவா?' என்றார். 'எல்லா குழிகளில் இருந்து வருவதும், ஒரே தண்ணீர் தானே! எதற்கு இத்தனை குழிகள் தோண்ட வேண்டும்?' என்றார், கவிஞர்.நம்மில் பலரும், இப்படித்தான் இருக்கிறோம். நமக்குப் பல துறைகளில் ஆர்வம் இருக்கலாம். ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்.நம்மில் பலர், தங்களுக்கு விருப்பமான, 10 விஷயங்களை எடுத்துக் கொண்டு, இதை செய்யலாம்; அதை முயற்சிக்கலாம் என, எல்லாவற்றையும் அரைகுறையாக செய்து, கடைசியில், ஒன்றிலும் சொல்லிக் கொள்ளும் படியாக செய்ய முடியாமல் இருக்கிறோம்.வெற்றி பெற்றவர்கள், குறிப்பிட்ட இலக்கை அடைந்த பின், திறமையை மெருகேற்ற, தாங்களாகவே நிறைய கற்றபடியே இருப்பர்.என் மானசீக குருக்களில் ஒருவர், ஹிந்திப் பாடகர் கிஷோர் குமார். அவர் எந்த குருவின் காலடியிலும் அமர்ந்து கற்கவில்லை. தானாகவே நிறைய கற்றுப் பாடினார்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்று.இந்தத் தலைமுறையில், மூன்று, நான்கு வயதில், இசை, ஓவியம் என்று குழந்தை ஆர்வம் காட்டினால், கற்க ஆரம்பித்து, 12 வயதில் கச்சேரிகள் செய்து, 'டிவி' நிகழ்ச்சியில் பாடி, சினிமாவில் பின்னணி பாடி, பணம், புகழ், மீடியா வெளிச்சம், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவர் என்று, 30 வயதிற்குள் எல்லாம் கிடைத்துவிட வேண்டும் என, அவசர கதியில் ஓடுகின்றனர். இந்த அவசரம் என்னை பயமுறுத்துகிறது.தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் கையில், மின்னணு சாதனத்தைக் கொடுத்து விடுகின்றனர் இன்றைய பெற்றோர்.ஒரு மனிதனுடைய சராசரி வாழ்க்கை, 70 வயது என்று வைத்துக் கொண்டால், 30 வயதிற்குள் எல்லாம் கிடைத்தபின், அடுத்த, 40 ஆண்டுகள் என்ன செய்வர்? சங்கீத வித்வான்களாக, நாம் மதிக்கும் அனைவரும், 50 வயதில் பாடியதைவிட, 60 வயதில் கூடுதல் மெருகுடன் பாடினர்.'பறசாலா' பொன்னம்மாள் டீச்சருக்கு தற்பாது, 96 வயது. 70 வயதில் பாடியதை விடவும் இசையை வெளிப்படுத்தும் திறன் அதிகரித்து உள்ளது.'உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தும் வயது எது?' என்று எப்போது கேட்டாலும், அடுத்த, 10 ஆண்டுகள் என்று தான் சொல்ல வேண்டும். எந்தத் துறையில் இருந்தாலும், நம்முடைய இலக்கு, 'அடுத்த, 10 ஆண்டுகள் என் துறையில், நான் பிரகாசிக்கப் போகும் காலம்' என்பதாகத் தான் இருக்க வேண்டும்.அஸ்வதி திருநாள் ராம வர்மா, கர்நாடக இசைப் பாடகர், திருவனந்தபுரம்.