உள்ளூர் செய்திகள்

மனசே மனசே... குழப்பம் என்ன!

காரணமற்ற பயம், பதற்றம், எதிர்காலம் பற்றிய கவலை, கவனமின்மை, தசைகளில் இறுக்கம், துாக்கமின்மை என, தொடர்ந்து ஒருவருக்கு இருந்தால், அது, 'ஜெனரலைஸ்டு ஆன்சைட்டி டிஸ்சாடர்' ஆக இருக்கலாம்.இப்படி, ஒரு பிரச்னையோடு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான, 35 வயது பெண், சமீபத்தில் ஆலோசனைக்கு வந்தார். வேலைக்குச் செல்லும் பெண் இவர். அவரைப் பார்த்த மாத்திரத்தில், எளிதாக, 'ஏன் பதற்றமா இருக்கீங்க?' என, பலரும் கேட்கும் அளவுக்கு, பதற்றமாக இருந்தார். 'எப்போதும் இதுபோல பதற்றத்துடனேயே இருப்பதால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை' என்றார். எதை நினைத்தாலும் பயம்.உதாரணமாக, அலுவலகத்தில், 'அப்ரைசல்' நேரம் வருகிறது என, வைத்துக் கொள்வோம். உடனடியாக, 'என் திறமை எப்படி மதிப்பிடப் படுமோ, இந்த வேலையில் தொடர முடியுமோ, முடியாதோ... தொடர முடியாமல் போனால், என் நிலைமை என்னவாகும்... இப்படி ஆகுமோ, அப்படி ஆகிவிடுமோ' என, நிறுத்த முடியாமல், கற்பனை செய்தபடியே இருப்பார். 'என்ன செய்ய? எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை; அதிலும், எல்லாவற்றிலும் எதிர்மறை எண்ணங்களே அதிகமாக வருகின்றன' என்றார்.முதல் முறை வந்த போது, பயம், பதற்றம், வயிறு பிரச்னைகள் இருப்பதாகச் சென்னார்; அதற்கு வேண்டிய ஆலோசனைகளையும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் சொன்னேன். அடுத்த முறை வந்த போது, 'துாக்கம் இல்லை' என்றார். ஒவ்வொரு முறை வந்த போதும், பழைய பிரச்னைகள் சரியாகிவிட்டது எனச்சொல்லி, புதிதாக வேறு சில கோளாறுகளை சொல்வார். ஒவ்வொரு முறையும் மாறாமல், பொதுவாக இருந்த ஒரு விஷயம்... பயம். மெதுவாக, அவரின் குழந்தைப் பருவம் பற்றி பேச ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு படித்த போது, இவர்கள் வீட்டில், நெருங்கிய உறவினர் ஒருவர் வந்து தங்கியுள்ளார்; அவரால், தொடர்ந்து, பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். 'யாரிடமும் இதை சொல்லக் கூடாது' என, அவர் மிரட்ட, பயந்து, யாரிடமும் சொல்லவில்லை. உறவினர் தங்கியிருந்த இரண்டு மாதங்களும், இவருக்கு தொந்தரவு இருந்திருக்கிறது. மனித மனத்தின் ஆழத்தில், கசப்பான அனுபவங்கள் அப்படியே துாங்கிக் கொண்டிருக்கும். வேலை, குடும்பம் அல்லது வேறு ஏதாவது விஷயத்தில், நமக்கு ஏற்படும் மன அழுத்தம், இவற்றை தட்டி எழுப்பி விடும்; அப்போது, எதைப் பார்த்தாலும் பதற்றம், பயம் என, ஆகிவிடும். தவிர, பெண்களுக்கு, 35 வயதிற்கு மேல் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளாலும், இதுபோன்ற எதிர்மறை உணர்வுகள் வரலாம்.பத்து வயதில் நடந்த சம்பவத்திற்கு, தான் பொறுப்பாளி இல்லை என புரிந்தாலும், தடுத்திருக்கலாமோ, கத்தி இருக்கலாமோ என, என்னென்ன சாத்தியங்கள் இருந்ததோ, அதை எல்லாம் நினைத்து, 'நான் தான் இதற்கு பெறுப்பாளி' என நினைத்து, பயந்தார். கணவர் உட்பட யாரிடமும் இதை சொல்லவும் முடியவில்லை. இயல்பிலேயே பயந்த சுபாவம் வேறு. பயம், பதற்றம் போன்ற உணர்வுகள் பொதுவானவை; எல்லாருக்கும் இருக்கும். அது, தினசரி வாழ்க்கையை பாதிக்கும் போது நோயாகிறது. குழந்தைப் பருவத்தில், பாலியல் தொந்தரவுக்கு ஆளானவர்களுக்கு, ஆண்கள் மேல் ஒரு பக்கம் பயம் இருந்தாலும், ஈர்ப்பும் இருக்கும். என்னோடு பகிர்ந்து கொண்ட நிமிடத்தில், பாதி மனப் பிரச்னை, இவருக்கு தீர்ந்து விட்டது. அதன்பின், அறிவாற்றல் செயல்பாடு சிகிச்சை உட்பட தேவையானதை கொடுத்த போது, அவரிடம் இருந்த பய உணர்வு, மெல்ல விலகியது.டாக்டர் சித்ரா அரவிந்த், உளவியல் நிபுணர், சென்னை.hellomanasconsultancy@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்