கொசுக்களை தடுப்பது மட்டுமே பாதுகாப்பு
ஸிகா வைரஸ் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கைடெங்கு, சிக்குன் குனியா போன்று, 'ஏடிஸ்' வகை கொசுக்களால் பரவும், 'ஸிகா' வைரசின் பாதிப்பு கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உலகம் முழுதும் நான்கு கோடி பேர் டெங்குவால் பாதித்தால், இவர்களில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே நோய் அறிகுறிகள் தெரியும். அதே போல தான், ஸிகா வைரஸ் பாதிப்பும். பலருக்கு பாதிப்பின் அறிகுறிகளே வெளியில் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், மிதமான அறிகுறிகளே இருக்கும். தீவிர அறிகுறிகள், மருத்துவமனையில் அனுமதி, இறப்பு என்பதெல்லாம், ஸிகா பாதிப்பில் மிகவும் அரிதானது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகை தான் டெங்கு, ஸிகா ஆகிய இரண்டு தொற்றையும் ஏற்படுத்துகிறது. ஆனால், டெங்கு அளவிற்கு ரத்த உறைவை ஏற்படுத்தும் தீவிர பிரச்னைகள் ஸிகாவில் கிடையாது.ரேலா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நலம் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, ஸிகா வைரஸ் குறித்து பொதுவான சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:ஸிகா வைரஸ் பரவுவது எப்படி?ஸிகா தொற்று பாதித்தவரின் ரத்தத்தில், முதல் ஏழு நாட்கள் தொற்றின் பாதிப்பு இருக்கும். இந்த சமயத்தில் தொற்று பாதித்தவரை கடித்த கொசு பிறரைக் கடிக்கும் போது, தொற்று பரவுகிறது. தொற்று பாதித்த நபருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதாலும் பரவலாம். ரத்தம் செலுத்துவதாலும் பரவலாம் என்ற கருத்தும் உள்ளது.ஏடிஸ் கொசு பகல், இரவு இரு வேளையும் கடிக்கலாம். ஆனால் , பகலில் இதன் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.அறிகுறிகள் என்ன என்ன?ஸிகா வைரஸ் பாதித்தால், பெரும்பாலும் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. சிலருக்கு மிதமான காய்ச்சல், தோலில் சிவந்த திட்டுக்கள், தலைவலி, கண்கள் சிவந்து போவது, தசைகளில், மூட்டுக்களில் வலி இருக்கும்.ஸிகா வைரஸ் உடலுக்குள் சென்று அதன் பாதிப்பு வெளியில் தெரிவதற்கு, மூன்று முதல் 14 நாட்கள் ஆகலாம். அறிகுறிகள் தெரிந்த பின், பாதிப்பு இரண்டு வாரங்கள் இருக்கலாம். அறிகுறிகள் இருக்கும் போது பரிசோதனை செய்தால் மட்டுமே, பாதிப்பை உறுதி செய்ய முடியும்.ஸிகா வைரஸ் பாதிப்புக்கு பிரத்யேக மருந்துகளோ, சிகிச்சையோ, தடுப்பு ஊசியோ இதுவரை கிடையாது. 'சப்போர்டிவ் மெடிசின்' என சொல்லப்படும், ஆதரவு சிகிச்சை தான் தரப்படுகிறது. டில்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், புனேவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு மையம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே, ஸிகா தொற்றுக்கான பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. ரத்த, சிறுநீர் மாதிரிகளை இங்கு அனுப்பி, தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.சிகிச்சை முறை எப்படி?பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையுடன், அறிகுறிகளுக்கு ஏற்ப மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம். வேறு உடல் பிரச்னைகளுக்கு ஏற்கனவே மாத்திரை சாப்பிடுவோர், டாக்டரின் ஆலோசனை பெற்று, அத்துடன் தேவையான மருந்துகளை சாப்பிட வேண்டும்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். திரவ ஆகாரங்கள், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். முழுமையாக ஓய்வில் இருப்பதும், நம் உடல் பழைய நிலைக்குத் திரும்ப உதவும்.கர்ப்பிணிகளுக்கு என்ன பாதிப்பு?கொரோனா, டெங்கு பாதித்தால், கருவில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால், ஸிகா வைரசில் இருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியோர் கர்ப்பிணிகள் தான். கர்ப்ப காலத்தில் முதல் இரண்டு மாதங்களில், ஸிகா வைரஸ் பாதித்தால் கருச்சிதைவு; ௭ - ௮ மாதங்களில் என்றால், குழந்தை இறந்தே பிறக்கவும் கூடும்.இவை இல்லாமல் கரு முழு வளர்ச்சி பெற்றாலும், பிறவிக் குறைபாடுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கருவில் வளரும் குழந்தையின் தலை, வளர்ச்சி இல்லாமல் சிறியதாக இருக்கும். 'மைக்ரோசெபாலி' எனப்படும் மூளையின் அளவு போதுமான அளவு வளர்ச்சி அடையாமல், குறைபாடுடன் இருக்கும். நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.பாதுகாத்துக் கொள்வது எப்படி?கர்ப்பிணிகள், ஸிகா வைரஸ் பரவும் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது, கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வது, திருமணமான பெண்களுக்கு ஸிகா பாதிப்பு ஏற்பட்டால், குணமான பின் அடுத்த மூன்று மாதங்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது. பாதிப்பு உள்ள பகுதியில் வசிப்போர், அடுத்த சில மாதங்களுக்கு கர்ப்பத் தடை மாத்திரைகளை பயன்படுத்தலாம். பாதித்த பகுதிக்கு சென்று வந்த பெண்களும் இதை பின்பற்ற வேண்டும். ஆண்களின் விந்தணுவில் நீண்ட காலம் வாழும் தன்மை உடையது, ஸிகா வகை வைரஸ். எனவே, ஆண்களும் கவனமாக இருப்பது அவசியம்.கெரோனா வைரஸ் போன்று இல்லாமல், ஸிகாவை பரப்பும் பிரதான காரணி கொசு என்பதால், அவை இல்லாத வகையில் சுத்தமான சுற்றுப்புறத்தை பராமரிப்பதே பாதுகாப்பு.இவ்வாறு அவர் கூறினார்.அலட்சியம் வேண்டாம்!அண்டை மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரம் அருகே, 24 வயது கர்ப்பிணி ஸிகா வைரசால் பாதிப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, 15 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.கடந்த, 1947ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளிடம், அதன்பின், 1952ல் மனிதர்களிடம் இப்பாதிப்பு இருப்பது உறுதியானது. இதுவரை, 86 நாடுகளில் இப்பாதிப்பு பதிவாகி உள்ளது. இந்தியாவில், 2017ம் ஆண்டு குஜராத் மாநிலம், ஆமதாபாதிலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரியிலும், ஸிகா வைரஸ் பாதிப்பு பதிவானது. ஸிகா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றாலும், கொசு தானே என அலட்சியமாக இருந்து விட வேண்டாம் என, எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.