உப்பும் சர்க்கரையும் உடலுக்கு கேடு!
வாழ்க்கை முறை மாற்றத்தால், துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து உள்ளது. பீட்சா, பர்கர், பேக்கரியில் கிடைக்கும் கேக், பிஸ்கட் போன்ற அனைத்து உணவுப் பொருட்களிலும், அதீத ருசிக்காக உப்பு, சர்க்கரை அதிக அளவு சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான உப்பு, சர்க்கரையை உணவில் சேர்க்கும் போது, வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இதய கோளாறுகள், பக்கவாதம் உட்பட, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 'ஒருவர் அதிகபட்சம், ஒரு நாளில், 5 கிராம் உப்பு (ஒரு டீஸ்பூன்), ஆறு முதல் எட்டு டீஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை, நான்கு டீஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தலாம்' என, உலக சுகாதார நிறுவனம் வரையறுத்து உள்ளது. ஆனால், சராசரியாக ஒரு நபர், மூன்று டீஸ்பூன் உப்பு, 20 டீஸ்பூன் சர்க்கரை, எட்டு டீஸ்பூன் எண்ணெய் பயன்படுத்துகிறோம். இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தேன் என, அனைத்திலும், 'பிரக்டோஸ்' எனப்படும் சர்க்கரை உள்ளது. ஆனால், செயற்கை சர்க்கரையால் தான் பாதிப்பு அதிகம். 'சல்பர்' எனப்படும் வேதிப் பொருளை சேர்த்து சுத்திகரித்த சர்க்கரையை தொடர்ந்து பயன்படுத்தும் போது, கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவ அசோசியேஷனில் (ஐ.எம்.ஏ) உறுப்பினர்களாக உள்ள, மூன்று லட்சம் டாக்டர்கள், நிர்ணயித்த அளவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளோம். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகளிடம் இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளை விளக்க இருக்கிறோம். தீவிர சிறுநீரக கோளாறு உள்ளவர்களில், 40 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர். இவர்களில், 60 சதவீதம் பேருக்கு, நீரிழிவுடன் உயர் ரத்த அழுத்தமும் உள்ளது. இந்த உடல் பிரச்னைகளுக்கு மிக முக்கிய காரணம், அதிக அளவில் பயன்படுத்தும் உப்பும், சர்க்கரையும். தேவைக்கு அதிகமாக, சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயும், உடல் பருமனை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக, உயர் ரத்த அழுத்தத்தையும், நீரிழிவையும் உண்டாக்குகிறது.பொதுமக்கள், பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குறைந்த அளவில் உப்பு, சர்க்கரை, எண்ணெய் பயன்படுத்தி, உணவு தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை, உணவு தயாரிப்பு, பதப்படுத்தும் தொழிலில் இருப்பவர்களை வலியுறுத்த வேண்டும் என, அரசையும் கேட்டுக் கொள்ள இருக்கிறோம்.பேராசிரியர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால்தலைவர், இந்திய மருத்துவ அசோசியேஷன் (தமிழ்நாடு பிரிவு). கன்னியாகுமரிlapsurgeon2001@yahoo.co.in