தன்னம்பிக்கை தோல்வி தரும்!
ஒருவருடைய திறமையும், காரியத்தின் இலக்கும் ஒத்துப்போகும் போது அக்காரியம் சாத்தியமாகிறது. இப்படி சாத்தியப்படும் போது, அனுபவம் ஏற்படுகிறது. இந்த அனுபவம் அறிவைத் தருகிறது. அனுபவமும், அறிவும் சேர்ந்து ஆற்றலை அளிக்கின்றன. ஆற்றல் மிகுந்தவன், வல்லமை மிகுந்தவனாக மாறுகிறான். ஆற்றலும், வல்லமையும் பெற்றவன் வெற்றியை எளிதில் அடைகிறான். இத்தகைய அனுபவம் தொடர்ந்து ஏற்படும்போது, நம்பிக்கை தன்னம்பிக்கையாக மாறும். 'முடியும்' என்ற உணர்வு ஏற்படும். 'தன்னால் முடியும்' என்ற தெளிவு வரும். இப்படி, படிப்படியாக தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும். இதுதான் ஆரோக்கியம்!வெற்றியை சந்திப்பது எப்போதுமே சிரமமான விஷயம் இல்லை. தொடர்ந்து வெற்றியை சந்திப்பதுதான் சிரமம். வசதி, வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால், தன்னைப்பற்றி அறியாமலேயே, உணராமலேயே வெற்றிகள் சிலருக்கு சாத்தியப்படும். இதனால், வெற்றியை சந்திக்கும் தைரியமும், துணிச்சலும், தானாகவே வந்துவிடும். இதற்குப் பெயர்தான் அசாத்திய துணிச்சல்!ஆனால், 'முடியும்' என்று நினைப்பது போல, 'முடியாது' என்ற நினைப்பும் அவசியம் ஏற்பட வேண்டும். அதையும் அலசி ஆராய்ந்து உணர வேண்டும். அப்போதுதான் தோல்விகளை சந்திக்காமல் இருப்பது சாத்தியப்படும்.எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்; தவறில்லை! தகுந்த அனுபவங்கள் மூலம், நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை கொள்ளும் போது, மிகுந்த நிதானமும் விவேகமும் தேவைப்படும். அப்படியில்லை எனில், வீழ்ச்சி நிச்சயமாகி விடும். எனவே, எப்போதும் நினைவில் வைத்திருங்கள்... More confidence makes a man fail.- மா.திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்