கனவு தவிர்... நிஜமாய் நில்! : நாள் கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை!
இருபத்தியெட்டு முதல், 30 நாட்களுக்குள் மாதவிடாய் வருவது தான் சரி என்பது, பொதுவான அபிப்ராயம். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 60 முதல், 70 சதவீத பெண்களுக்கு, 28 முதல், 30 நாட்களில் தான் மாதவிடாய் வரும்; அதேநேரம், எல்லாருக்குமே அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. ஆரம்ப நாட்கள் முதல், எத்தனை நாட்களில் மாதவிடாய் வர ஆரம்பிக்கிறதோ, அது போலவே மாதவிடாய் காலம் முழுவதும் தொடர வேண்டும். இதை, 'மென்ஸ்ட்சுட்ரல் சைக்கிள் ரிதம்' எனச் சொல்வோம். 28 முதல், 30 நாட்களுக்கு ஒரு முறை வர வேண்டியது; ஆனால், முதலில் இருந்தே, 32 நாட்களுக்கு ஒரு முறையோ, 24 நாட்களுக்கு ஒரு முறையோ வருகிறது என்றால், எந்த பிரச்னையும் இல்லை. சரியான நாட்களில் வராவிட்டாலும், வருகிறது; அதாவது, 'இர்ரெகுலர்லி ரெகுலர்' துவக்கம் முதல் உங்களுக்கு சுழற்சி எப்படி இருக்கிறதோ, அந்த சுழற்சியில், ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை தேவை. ரத்த சோகை, தைராய்டு பிரச்னை, லேசான ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றால், இளம் பெண்களுக்கு இதுபோல மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் வரலாம். தவிர, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவியரை, ஜனவரி மாதத்தில் இருந்து, பெற்றோர், ஆசிரியர், சுற்றி இருப்பவர்கள், தேர்வு பயத்தை ஏற்படுத்தி விடுவர்; இதனால், அத்தனை நாட்களாக, இயல்பாக இருந்த மாதவிடாய் சுழற்சி, இந்த அதீத தேர்வு பயத்தால் மாறக் கூடும்.கர்ப்பப்பை சுருங்குவதால், மாதவிடாய் நேரத்தில் வலி வருகிறது. இந்த வலியிலிருந்து நிவாரணம் தருவது மாத்திரைகள். இதனால், திருமணத்திற்கு பின் தாம்பத்திய உறவுக்கோ, குழந்தை பெறவோ எந்த பாதிப்பும் இல்லை. லேசான, தாங்கிக் கொள்ளக் கூடிய, வலிக்கு மாத்திரை இல்லாமல் சமாளித்து விடலாம். தாங்க முடியாத நிலையில், வாந்தி, மயக்கம் போன்ற வேறு பிரச்னைகள் வரலாம். அதனால், மாத்திரை போட்டுக் கொள்ளலாம்.கவனிக்க வேண்டியது... டாக்டரின் ஆலோசனை கண்டிப்பாக அவசியம்.டாக்டர் அமுதா ஹரி மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.dr_amudha@yahoo.co.in