உள்ளூர் செய்திகள்

கனவு தவிர்... நிஜமாய் நில்! வழி மாறியதால் வந்த பிரச்னையா!

முன்னெப்போதும் இல்லாத வகையில், சில ஆண்டுகளாக, 'ஹைப்போ தைராடிசம்' எனப்படும், தைராய்டின் அளவு குறைபாட்டால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. 10 பெண்களில், எட்டு பெண்களுக்கு இப்பிரச்னை இருக்கிறது. அயோடின் சத்து குறைபாட்டால் தான், தைராய்டு பிரச்னை வருகிறது என்பதால், சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில், அயோடின் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டது; அப்படி இருந்தும், பாதிப்பு அதிகமாகி வருகிறது.என்ன காரணமாக இருக்கும் என ஆராய்ந்ததில், பெற்றோருக்கு, 'தைராய்டு' குறைபாடு இருந்தால், அடுத்த தலைமுறைக்கும் வருகிறது. இது தவிர, உணவுப் பழக்கத்தில், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். பெண்கள், சரியான அளவு உணவை, தேவையான சத்துக்களுடன், சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லையோ என்ற கவலையும் வருகிறது. 30 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு, இப்பிரச்னை அதிகம் இருப்பதை பார்க்கிற போது, பெண்களுக்கு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த, நேரம் இல்லை என, தோன்றுகிறது. காலையில் எழுந்து, குழந்தைகளை கவனித்து, சமையல் செய்து, அலுவலகத்திற்கு ஓடும் போது, காலை உணவை சாப்பிடுவதில்லை; டீ பிரேக்கில், வெளியில் கிடைப்பதை, அந்த நேர பசிக்கு வாயில் போட்டுக் கொள்கின்றனர்...'ஜங்க் புட்' அதிகம் சாப்பிடுகின்றனர்; 'ஏசி' அறையில் அமர்ந்து வேலை செய்யும் பெண்கள், தினமும், 8 - 10 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பதில்லை. 'ரிலாக்ஸ்சேஷ'னுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதில்லை. நான் - வெஜ் சாப்பிடலாம்... மீனோ, சிக்கனோ குழம்பில் போட்டு சாப்பிடுவதற்கு பதில், வறுத்து, பொரித்து சாப்பிடுவது அதிகமாகி விட்டது. நம் பாரம்பரிய உணவுகளை பெரும்பாலும் தவிர்த்ததும், 'தைராய்டு' பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். 'இட்லியை போல சிறந்த உணவு வேறு இல்லை' என, உலகம் முழுவதும் கூறுகின்றனர். எத்தனை பொறுப்புகள் பெண்களுக்கு இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தால் தான், வீடு, அலுவலகம் இரண்டையும், சரிசமமாக நடத்த முடியும். அதற்கு முதலில், அடிப்படையான சில விஷயங்களை பின்பற்ற துவங்க வேண்டும். காலை உணவை, 8:00 மணி முதல், 9:00 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலையோ, மாலையோ குறைந்தது, 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி. வாரம் ஒரு நாள் குடும்பத்துடன் வெளியில் செல்வது, தியானம் செய்து, மனதை, 'ரிலாக்ஸ்'சாக வைத்துக் கொண்டால், இப்பிரச்னைகள் எல்லாம் வராமல் தவிர்க்க முடியும்.டாக்டர் வி.தேவகி,பொதுநல மருத்துவர், சென்னை.doctordevaki@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !