கனவு தவிர்... நிஜமாய் நில்! - 50 கிலோ தாஜ்மஹாலாக இருப்பதே சரி!
இரண்டு வயது முதல், எட்டு வயது வரை பெண் குழந்தைகள், சரியான உடல் எடை, ஊட்டச் சத்துடன் இருக்க வேண்டும். வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியுடன் குழந்தை இருந்தால், வயது ஏற ஏற, அதிக உயரம், உடல் எடையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர, வயதுக்கு வருவதும் சரியான வயதிற்கு முன்பே நடக்கலாம். பெண் குழந்தையின் ஆரோக்கியத்தில், 2 - 8 வயது வரை உள்ள காலம் மிக முக்கியமானது.சமீப ஆண்டுகளில், 40 சதவீதம் குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். ஆரம்ப பள்ளியில் சேர்க்கும் போதே, பெண் குழந்தை அதிக உடல் எடையுடன் இல்லாமல், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தைகளிடம் பாசம் காட்டுவதற்கு, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, கேட்ட உணவை எல்லாம் வாங்கித் தருகிறோம். கேட்காத நேரத்திலும் குழந்தை எதுவும் சாப்பிடவில்லையோ என்ற கவலையில் வாயில் திணிக்கிறோம்; இந்த பழக்கம் மாற வேண்டும்.எட்டு வயது வரை சரியான உடல் எடையுடன் இருந்தால், அதன்பின், உடல் எடை அதிகம் ஏறாது. அடுத்தது, வயதுக்கு வந்ததில் இருந்து, 15 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற்றுக் கொண்டால், மார்பகப் புற்றுநோய் வருவது குறைவு. தற்போது, இது மாறி விட்டது. 30 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து, அடுத்து சில ஆண்டுகள் கழித்து குழந்தை பெறுவதால், 40 வயதிற்குள்ளேயே, மார்பகப் புற்றுநோய் வருவது அதிகரித்து உள்ளது.நம்முடைய பெண்களின் சராசரி உயரம், 155 செ.மீ., எடை சராசரியாக, 50 கிலோ இருக்க வேண்டும். 60 கிலோவிற்கு மேல் ஆகிவிட்டாலே குண்டாக இருக்கிறோம் என்று உணர்ந்து, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மரபணுக்களால் வரும் மார்பகப் புற்று நோய், 10 சதவீதம் மட்டுமே. மற்ற, 90 சதவீதம் பெண்கள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் காரணங்கள் தான். எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.ஒரு கி.மீ., துாரத்தை, 10 நிமிடங்களில் கடந்தால் தான் பலன். இதுபோல, 3 கி.மீ., நடக்க வேண்டும். அந்த அளவு வேகமாக நடந்தால் தான் எடை குறையும். உடம்பிற்கு பலன் தருவதாக இருக்கும். ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு நாளில் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் நடக்கலாம். 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்தால் நல்லது. மார்பகத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால், அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், உடனடியாக நம்மால் உணர்ந்து கொள்ள இயலும் என்று மனரீதியான ஒரு கோட்பாடு தற்போது வெளிநாடுகளில் பிரபலமாகி வருகிறது. எங்கள் மையத்தில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு, பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களில், தேவைப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை அல்லது குறைந்த கட்டண சிகிச்சை செய்கிறோம்.டாக்டர் ராமநாதன் ஜெயராமன்,கேன்சர் சிறப்பு மருத்துவர், சென்னை.vasanthamemorial@gmail.com