உள்ளூர் செய்திகள்

வைரஸ் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது!

நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி என்பது தனித்துவம் வாய்ந்தது, வியப்பானது, அதே நேரத்தில் சிக்கலானதும் கூட. கொரோனா வைரஸ் போன்ற புதிய வைரஸ் நம் உடலினுள் நுழையும் போது, நோய் எதிர்ப்பு சக்தி செயல்பட துவங்குகிறது.இதில், பல மாற்றங்கள் நிகழும். முதன்மையானது, 'ஆன்டிபாடீஸ்' எனப்படும் நோய் எதிர்ப்பு அணுக்களை உருவாக்கும். நோய் எதிர்ப்பு செல்களில் தகவல் பரிமாற்றங்களை செய்யும் 'டி' செல்களும் வைரஸ் கிருமிக்கு எதிராக வேலை செய்ய துவங்கும்.நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், வைரசை உடனடியாக அழித்து விடும். அத்துடன் வைரசின் அமைப்பு, தன்மை போன்ற தகவல்களை தன் நினைவில் பதிய வைத்து கொள்ளும். மறுமுறை இதே வைரஸ் உடலில் நுழைந்தால், இதை விடவும் வேகமாக அதை அழித்து விடும்.தடுப்பூசிஇந்த நுாற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்பு கொரோனா தடுப்பூசி. இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டுவதற்கு, இது மிகவும் பாதுகாப்பான வழி. தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அணுக்கள் இயல்பாகவே உருவாகும் தான். ஆனால், இது நபருக்கு நபர் வேறுபடும். மிதமான தொற்று பாதிப்பு இருந்தால், ஆன்டிபாடீஸ் குறைவாகவே உருவாகி இருக்கும். இந்த எதிர்ப்பு சக்தி, சிலருக்கு, சில மாதங்கள் வரையிலும், வேறு பலருக்கு ஓராண்டு வரையிலும் இருக்கிறது.எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டால், நம் நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி, வைரஸ் பற்றிய தகவல்களையும் பதிய வைத்து விடும். அதன்பின் புதிய மரபணு மாற்றம் ஆன வைரஸ் பாதித்தாலும், இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியுடன் தடுப்பூசியால் ஏற்படும் துாண்டுதலும் சேர்ந்து, சுலபமாக குணமாகலாம்.ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு சரியாகி இருக்கலாம். சிலர் தொற்று ஏற்படும் முன்பே தடுப்பூசி போட்டு இருக்கலாம். ஆனால் மிதமான பாதிப்பு இருந்தாலும், மற்றவர்களுக்கு பரவுவது குறையவில்லை. இதற்கு உதாரணம் சமீபத்தில் வந்த ஒமைக்ரான். இன்னும் நிறைய வைரஸ்கள் உயிர்ப்புடன் சுற்றுகின்றன. எனவே, பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்வது தான் பாதுகாப்பானது.டாக்டர் சவுமியா சுவாமிநாதன், தலைமை மருத்துவ விஞ்ஞானி,உலக சுகாதார மையம், ஜெனிவா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !