நாங்க இப்படிதானுங்க!: மறுக்க தெரிவதும் கலை!
'நமக்கு நம் மீது மரியாதை இருக்க வேண்டும்...' என்ற மிகப் பெரிய பாடத்தை, இரண்டாவது இன்னிங்ஸ் நடிக்க வந்த பிறகே, கற்றுக் கொண்டேன். சினிமாவில், பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை; பெரும்பாலும், பின் இருக்கை தான் இருக்கிறது. நான் சினிமா துறையில் இருப்பதால், அதையே உதாரணமாகச் சொல்லுகிறேன்.பெண்கள், தங்களைத் தாங்களே மதிக்க தெரிந்திருக்க வேண்டும். நமக்கு முக்கியத்துவம், மதிப்பு இல்லாத விஷயங்களுக்கு, 'நோ' சொல்லத் தெரிய வேண்டும். ஒரு முறை மறுத்தால், மீண்டும் நமக்கு வாய்ப்பு வராது; கோபப்படுவர்; நிராகரித்து விடுவர், என்ற பயத்திலேயே, 'நோ' சொல்லத் தயங்குகிறோம். துவக்கத்தில், நானும் இது போல இருந்திருக்கிறேன்.'எனக்கு நடிக்கத் தெரியும்; முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன்; இல்லாவிட்டால், சந்தோஷமாக வீட்டில் இருக்கிறேன்...' என்று உறுதியாக இருந்தேன். வாய்ப்புகள் இல்லாமல், பெரிய இடைவெளி வந்தது. நம் மீது நமக்கு மரியாதை வந்துவிட்டால், எல்லாமே சரியாகத் தான் நடக்கும்.இப்போது, 40 வயதில், எதிர்பார்க்காத வகையில், நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. திறமை, தன்னம்பிக்கை இரண்டையும் வலிமையாகப் பிடித்துக் கொண்டால், நமக்கான வாய்ப்புகள் தானாகவே வரும்.ஜோதிகா, நடிகை