முதியோருக்கு இது புதுசு... பழுத்துரும் பர்சு!
ஆண்டிராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் முதியோரின் அறியாமையையும், ஆர்வத்தையும் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இவர்களிடம் கவனமாக இருந்து தப்புவது குறித்து, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி பேராசிரியரும், சைபர் கிரைம் நிபுணருமான சுசித்ரா வழங்கும் 'டிப்ஸ்' இதோ!பாடம் எடுக்கணும்ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் முதியோருக்கு, சில சைபர் பாதுகாப்பு வழிமுறைகளை, சொல்லிக் கொடுப்பது அவசியம். குறிப்பாக, சமூக வலைதளங்களில் உள்ள தெரியாத இணைப்புகளை (Links) சுவாரசியத்தின் காரணமாக 'கிளிக்' செய்துவிடுகின்றனர். இதனால், பண பரிவர்த்தனை செயலிகளின் பின் எண், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் சுலபமாக திருடப்பட்டு, பண இழப்பு ஏற்படுகிறது.ஆபாச வீடியோ கால்போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது, ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என உளவியல் ரீதியாகப் பயமுறுத்துகின்றனர். பண மோசடியைத் தாண்டி 'டிஜிட்டல் அரெஸ்ட்' மற்றும் போலியான வீடியோ அழைப்புகள் மூலம் மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஏஐ ஆபாச வீடியோ அழைப்புகளை அனுப்பி, அதை அவர்களுக்கே தெரியாமல் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்கின்றனர். பின்னர் முதியவரின் மொபைல் தொடர்புகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு குடும்பத்தினருக்கு அந்த வீடியோவை அனுப்பிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.ஓ.டி.பி. சொல்லாதீங்கபோனில் பேசுபவர்கள் வார்த்தைகளில் இனிப்பு தடவி பேசினாலும், மொபைலுக்கு வரும் ஓ.டி.பி. எண்களை கூறக் கூடாது. சமீபத்தில் முதியவர் ஒருவரிடம், சிலிண்டர் விநியோகத்திற்கான 'டி.ஏ.சி' (DAC) எண் என்ற பெயரில் ஓ.டி.பி பெற்று, வெளிநாட்டில் இருக்கும் அவரது மகன் அனுப்பிய பெரும் தொகையை மோசடி கும்பல் அபகரித்துள்ளது.மிரட்டலுக்கு பயப்படாதீங்க!* அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம். * மெசேஜ், சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற லிங்கை தொடக்கூடாது. * வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண்களை யார் கேட்டாலும் பகிரக் கூடாது. உங்கள் வேலட், ஏ.டி.எம்., பவுச், கார்டில் பின் நம்பர் எழுதி வைக்கக்கூடாது. * மிரட்டல் வந்தால் பயப்படாமல் உடனே வீட்டாரிடமோ, சைபர் கிரைம் போலீசாரிடமோ சொல்லி விடுங்கள்.