UPDATED : ஜூலை 11, 2024 05:23 PM | ADDED : ஜூலை 11, 2024 05:19 PM
கால்பந்து உலகில் யூரோ கால்பந்தாட்டப் போட்டி முக்கியமானதாகும்.ஒவ்வொரு முறையும் இந்தப் போட்டி நடைபெறும் போது காலத்திற்கும் நினைவில் நிற்கும் வகையில் ஒரு கோல் அடிக்கப்படுகிறது.அந்த கோல் பற்றி பலமுறை பேசப்படும்,விவாதிக்கப்படும்,காணொளியில் பகிரப்படும்.நடைபெற்றுவரும் யூரோ கால்பந்து தொடரிலும் அப்படி ஒரு கோல் அடிக்கப்பட்டது, கோல் மட்டுமல்ல கோல் அடித்தவரும் ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்.
அவர்தான் லாமின் யமல்.16 வயதே ஆன இளம் ஸ்பெயின் வீரர்.ஓரு கால்பந்து சூப்பர் ஸ்டார் பிறந்துவிட்டார் என்று இங்கிலாந்தின் முன்னனி கால்பந்தாட்ட வீரர் லினேக்கர் இவரைப்பற்றி குறிப்பிடுகிறார்.ஸ்பெயினைச் சேர்ந்த பணிப்பெண் ஷீலா எபனா மற்றும் பெயிண்டர் மவுனிர் என்பவருக்கும் பிறந்த யமலின் ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.மூன்று வயதிலேயே தந்தையைப் பிரிந்து தாயுடன் வேறு ஊருக்கு மாற்றலானவருக்கு தாயின் அன்பும் அருகில் இருந்த கால்பந்தாட்ட மைதானமும் மட்டுமே ஆறுதலாக இருந்தது.நான்கு வயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம்காட்டி வந்த யமலின் ஆட்டத்தை 13 வயதில் அடையாளம் கண்ட பயிற்சியாளர் ஒருவர் அவரை நெறிப்படுத்த பதினைந்து வயதிலேயே சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளத் துவங்கினார்.
யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியின் இளம் வீரராக களம் இறங்கினார்.அரை இறுதியில் பிரான்சிடம் ஒரு கோல் வாங்கிய நிலையில் மொத்த ஸ்பெயினும் நகம் கடித்தபடி ஆட்டத்தை பார்த்தவாறு இருந்தது, அப்போது யமல் அடித்த அற்புதமான கோல் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.ஒன்றுக்கு ஒன்று சமன் என்ற நிலையில் தொடர்ந்து ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேனி ஒலமா மேலும் ஒரு கோல் அடிக்க இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரான்சை வென்று ஸ்பெயின் அரை இறுதியில் நுழைந்தது.போட்டியின் முடிவில் யமல் பற்றித்தான் உலகம் முழுவதும் பேச்சு.ஒவ்வொரு கால்பந்தாட்ட வீரனின் கனவும் தேசத்திற்காக விளையாடுவதே அது எனக்கு இந்த வயதிலேயே வாய்த்தது பெரும் பாக்கியமே இறுதிப் போட்டியிலும் வென்று கோப்பையை பெறுவோம் என்றுயமல் கூறியுள்ளார்.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியுடன் இங்கிலாந்து மோதுகிறது.ஸ்பெயின் அணி சார்பாக விளையாடும் யமலின் ஆட்டத்தைக் காண உலகமே சின்னத்திரை முன் காத்திருக்கப்போவது நிச்சயம்.-எல்.முருகராஜ்