உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / ஐம்பத்தைந்து குழந்தைகளின் தாய் சியாமளா

ஐம்பத்தைந்து குழந்தைகளின் தாய் சியாமளா

மரியாதைக்குரிய திரு கே.ரகுநாதன் ஒரு முதுபெரும் எழுத்தாளர், பல நல்ல விஷயங்களை 'கடுகு' என்ற புனைப்பெயருடன் நகைச்சுவையாக சொல்வதில் வல்லவர். தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.உங்களது நிஜக்கதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அனைத்தும் சமூகத்திற்கு பயன்படும் கட்டுரைகள் என்று குறிப்பிட்டவர் சென்னை கோட்டூர்புரத்தில் சியாமளா சுவாமிநாதன் என்று ஒருவர் இருக்கிறார், நல்ல மனுஷி போய் பார்க்கமுடியுமா? என்று கேட்டு இருந்தார். அதன்படி அவரை நேரில் போய் பார்த்தேன் சாதாரண நல்ல மனுஷி அல்ல மிக மிக நல்ல மனுஷி.இன்றைக்கு 62 வயதாகும் சியாமளா முன்னாள் பத்திரிகையாளர்.பிர்லா பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் பெல்லோஷிப் பெற்ற தமிழ்நாட்டின் முதல் பெண் பத்திரிகையாளர். எந்த வயதிலும் படிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தனது ஐம்பது வயதில் பிஎச்டி முடித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.பெண் சிசுக்கொலை குறித்து ஆராய்ந்து எழுதுவதற்காக கடந்த 95-ம் ஆண்டில் உசிலம்பட்டி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு சென்று மாதக்கணக்கில் அந்த ஊர் மக்களோடு மக்களாக அங்கேயே தங்கியிருந்தவர்.தாய்மையை அதிகமாக போற்றும் தமிழகத்தில் தாயே தான் பெற்ற பெண் பிள்ளையை கொல்வாளா? என்ற சந்தேகத்துடன்தான் அங்கே போனேன். வறுமை,அதிகப்படியான வரதட்சணை கொடுமை, எதிர்கால அச்சம், மாமியார் மற்றும் கணவரது கொடுமைகள் இதையெல்லாம் தாண்டி தனக்கு ஏற்ப்பட்ட சமூக கொடுமைகள் தனது பெண் பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு பெண் பிள்ளையை கொன்றது அல்லது கொல்ல துணை நின்றது தெரியவந்தது.எருக்கம் பால் கொடுத்தும், நெல் மணிகளை குடுத்தும், துாளியில் இறுக்கியும், மூச்சை திணறடித்தும் என்று விதவிதமாக பெண் சிசுக்களை கொல்வது குறித்து அறிந்த போது ரத்தம் உறைந்து போனது.கனத்த இதயத்தோடு 'தமிழக்கத்தில் பெண் சிசுக்கொலைகள்' என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்திற்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. இவருக்கு அகில இந்திய அளவில் பாராட்டும் பதக்கங்களும் கிடைத்தன.இதனால் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக மனம் கனத்து போயிருந்தார் டாக்டர் சியாமளா. அவரால் பெண் சிசுக்கொலை நடந்த கிராமங்களில் இருந்து மீண்டு வரமுடிந்ததே தவிர அங்கு நடந்துவரும் பெண் சிசுக்கொலை சம்பவங்களில் இருந்து மீண்டு வரமுடியவில்லை.துாக்கத்தில் எல்லாம் இவரைச்சுற்றி வந்து பெண் குழந்தைகள் அழுதன, எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என கதறின, நாங்கள் என்ன பாவம் செய்தோம் என அரற்றின, காரணமே இல்லாமல் சியாமளாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது, கைக்கு எடுத்த உணவு வாய்க்கு செல்ல மறுத்தது.ஒரு பத்திரிகையாளராக இருந்து இந்த பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியதோடு நம் பிரச்னை முடிந்துவிட்டதா? இதனால் தீர்வு வந்துவிட்டதா? என்றெல்லாம் யோசித்தார். இனி எழுதியது போதும் செயலில் இறங்கு என மனது ஆணையிட தனது தாத்தா-பாட்டியின் பெயரில் சீனிவாசன்-வாலாம்பாள் அறக்கட்டளையை துவங்கிவிட்டார்.குடும்ப செலவுகளை சுருக்கிக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து முடிந்தளவு சிசுக்கொலைக்கு ஆளாகாமல் பெண் குழந்தைகளை பார்த்துக்கொள்வது, பராமரிப்பது என முடிவு செய்தார். இவரது எண்ணத்தை முறைப்படி நடைமுறைப்படுத்த வாத்சல்யம் அறக்கட்டளை கவுதமன் முன்வந்தார்.பராமரிப்பு, படிப்பு, உணவு, உடை கொடுத்து ஐந்து பெண் குழந்தைகளை தனது பொருளாதார நிலைப்படி வளர்க்கமுடியும் என்று முடிவானதும் பிறக்கும் போதே மரணத்தை தழுவ இருந்து ஐந்து பெண் குழந்தைகளை வாத்சல்யம் அறக்கட்டளையின் கீழ் வளர்த்தனர்.சென்னையில் இருந்து ஒசூரில் உள்ள அந்த குழந்தைகளை பார்க்க அடிக்கடி சென்றுவந்தார். அம்மா அம்மா என்றழைக்கும் அந்த பெண் குழந்தைகளின் அன்பு மழையில் நனைந்தவர் வருடா வருடம் பராமரிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே சென்றார்.எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், விளம்பர வெளிச்சத்தையும் விரும்பாமல் தன் மனதிற்கு பிடித்த இந்த விஷயத்தை மிக அழகாக மிக நேர்த்தியாக மிக உண்மையாக எல்லாவற்றையும் விட மிக அன்பாக இவர் அணுகியதை பார்த்த பலரும் இவரது தொண்டிற்கு தோள் கொடுத்தனர். அவர்களில் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர் கடுகு, எழுத்தாளர் சிவசங்கரி, முன்னாள் ஐபிஎஸ் நட்ராஜ் ஆகியோரும் உண்டு.இன்றைய தேதிக்கு டாக்டர் சியாமளா ஐம்பத்தைந்து குழந்தைகளின் அம்மா. அந்த குழந்தைகளைப் பற்றி பேசும்போதே கண்கலங்கிவிடுகிறார் அப்படி ஒரு நெகிழ்ச்சியான மகிழ்ச்சி அவருக்கு.இவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக தேன்கனிக்கோட்டையில் ஒன்றரை ஏக்கர் நிலம் தானமாக கிடைத்தது. அதில் ஒரு வீட்டிற்கு மூன்று லட்ச ரூபாய் என்ற மதிப்பீட்டில் இருபது வீடுகள் கட்டும் திட்டம் கிட்டத்தட்ட நிறைவேறும் நிலையில் உள்ளது.இந்த திட்டம் நிறைவேறியதும் ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து பெண் குழந்தைகள் குடியமர்த்தப்படுவர். அவர்கள் திருமணமாகி செல்வது வரை அந்த வீட்டில் சொந்த வீடு போல இருந்து கொள்ளலாம். அவர்களை பார்த்துக்கொள்ள பராமரிக்க கேர் டேக்கர்களும் உண்டு.தொப்புள் கொடி கூட சரியாக வெட்டப்படாமல் புதரில் துாக்கி எறியப்பட்ட பெண் குழந்தை சரஸ்வதிக்கு இப்போது வயது 11 பிரமாதமாக அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார் வருங்காலத்தில் நான் ஐபிஎஸ் ஆவேன் என்கிறார்.இது போல ஒவ்வொரு பெண் குழந்தைக்குள்ளும் ஓரு லட்சியத்தை விதைத்துள்ள சியாமளாவிற்கு, இவர்களுக்கு கூடுதலாக தொழில்கல்வி கற்று வேண்டும், இந்த பெண்கள் அதிகாரம் படைத்தவர்களாக, பொருளாதார நிலையில் யாரையும் சாராமல் இருப்பவர்களாக உருவாக்கவேண்டும் என்பது போன்ற ஏராளமான கனவுகள் இருக்கிறது.ஒவ்வொரு கனவும் நனவாக ஒரு விலை இருக்கிறது.அதை விலை என்று கூட சொல்லவேண்டியது இல்லை,கல்லறையாக மாற இருந்த கருவறையில் இருந்து தப்பிப்பிழைத்த நமது பெண் சமுதாயம் நல்ல நிலை அடைய நாம் கொடுக்கும் நன்கொடை என்று கூட சொல்லலாம்.இங்குள்ள பெண் குழந்தைகளுக்கு இன்னும் நிறைய அம்மாக்கள், அப்பாக்கள், அண்ணன்கள், அக்காக்கள் தேவைப்படுகிறார்கள், அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க விரும்பினீர்கள் என்றால் சியாமளாவிடம் பேசுங்கள், அவரது எண்:9941387193.-எல்.முருகராஜ்dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை