உள்ளூர் செய்திகள்

அச்சிலே உருவாக்கப்படும் கட்டடம்

முப்பரிமாண அச்சு (3D Printing) தொழில்நுட்பம் பற்றி 'பட்டம்' இதழில் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தோம். பொம்மைகள், சிறு இயந்திரங்கள், அன்றாட வாழ்வில் பயன்படும் பொருள்கள் என பலவற்றை முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்க முடியும். தற்போது துபாயில் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை அச்சிடலாமா?! ஆமாம்! முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, முழுவதும் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் கட்டடம் (3D Printed Building) துபாயில் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் சிறப்பு கான்கிரீட் கலவை, வலுப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் இழை, ஜிப்சம் ஆகிய மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 17 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒற்றை மாடிக் கட்டடம் இது. இதற்குப் பயன்படுத்தப்பட்ட 3 டி பிரிண்டர், 20 அடி உயரமும், 120 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டது. இந்த பிரிண்டரை இயக்க ஒருவர் மட்டுமே போதும். இந்த கட்டடப் பணியில், பொறியாளர், கட்டுமான அமைப்பாளர், எலக்ட்ரீஷியன் என 18 பேர் பணி புரிந்துள்ளனர். இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாலர் செலவாகி உள்ளது. துபாயில் 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதக் கட்டடங்கள் முப்பரிமாண முறையிலேயே உருவாக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !