பறக்காத பறவை
கிவிஆங்கிலப் பெயர்: 'கிவி' (Kiwi)உயிரியல் பெயர்: 'அப்டெரிக்ஸ் ஆஸ்ட்ராலிஸ்' (Apteryx Australis)'கிவி' கோழி இனத்தைச் சேர்ந்த பறவை. 'அப்டெரிகிடே' (Apterygidae) குடும்பத்தைச் சேர்ந்தது. கோழியின் அளவுதான் இருக்கும். இதன் இறக்கைகள், சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகள் வெளியே தெரியாத அளவுக்கு, மிகச் சிறியதாக இருக்கும். இறக்கைகள் இருந்தாலும் இவற்றால் பறக்க முடியாது. ஆனால், இவை மணிக்கு 19 கி.மீ. வேகத்தில் ஓடும். அலகு நீளமாகவும், வளைந்தும் இருக்கும். கூர்மையான அலகின் உதவியோடு, இவை இரையைப் பிடித்து உண்கின்றன. கால்களின் நான்கு விரல்களிலும் தடித்த தசை காணப்படும். இவை மிகுந்த கூச்ச சுபாவமுடையவை. பகல் முழுவதும் பொந்துகளில் உறங்கும். இரவு நேரங்களில் நடமாடும். புழுக்கள், பூச்சிகள், பழங்களை உண்ணும். கிவி பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். முட்டைகள் அளவில் பெரியதாக இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முட்டைகள் வரை இடும். முட்டைகளை ஆண், பெண் இரு பறவைகளும் அடைகாக்கின்றன. மரப்பொந்துகள், புதர்ப்பகுதிகளில் உள்ள பொந்துகளை வசிப்பிடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. காட்டுப்பன்றி, காட்டுப் பூனை போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படுகின்றன. நியூசிலாந்திலும் அதைச் சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளிலும் இவை வாழ்கின்றன. கிவி, காடுகளில் வாழும் பறவை என்பதால், காடுகளை அழித்தல் போன்ற இயற்கைக்கு எதிரான செயல்கள் இவற்றின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி.