உள்ளூர் செய்திகள்

மின்விசிறியை பயன்படுத்தாத எழுத்தாளர்

''உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் எவை?'' என்று ஓர் எழுத்தாளரிடம் கேள்வி கேட்டார் நிருபர். 'தான் படித்த கதைகளில் இருந்து எதையாவது சொல்வார்' என்று எதிர்பார்த்தார் நிருபர். ஆனால் எழுத்தாளரோ ''என் பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன'' என பதில் சொன்னார். இப்படி பள்ளிக்கூட பாடப் புத்தகங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான அந்த எழுத்தாளர், அசோகமித்திரன். மிகவும் மென்மையான குணம் கொண்டவர். அவர் தனது அறையில் மின்விசிறியைப் பயன்படுத்தியதில்லை. அதைப் பற்றிக் கேட்டதற்கு, ''நான் எப்போதும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பேன். அதன் வழியே என் அறைக்குள் வரும் பறவைகள், மின் விசிறியில் அடிபட்டு விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் நான் மின்விசிறியைப் பயன்படுத்துவதில்லை'' என்பார்.கனவுகள் பற்றிக் கேட்டதற்கு, ''எனக்கு எண்பது வயதுக்கு மேல் ஆகிறது. இன்னும் எனக்கு கனவுகள் வருகின்றன. கனவுகள் வரும் கதவைச் சாத்த வேண்டும் என்று தோன்றும். ஆனால் எப்படிச் சாத்துவது என்றுதான் தெரியவில்லை'' என்பார்.''உங்களுடைய கதைகளில் நீங்கள் இருக்கிறீர்களா?'' என்று கேட்டால், ''ஆம் பல நேரம் நானே கதாநாயகனாக இருந்திருக்கிறேன்'' என்பார்.ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் பிறந்தவர் அசோகமித்திரன். இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு, தனது21-வது வயதில் சென்னையில் குடியேறினார்.எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டூடியோவில், பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார். பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி, முழுநேர எழுத்தாளரானார். 'கணையாழி' இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1954ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக, 1996இல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, போன்றவை இவரது நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன் வைத்தவை.பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன், சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர்.அவர் கவிதைகள் எழுதியதில்லை என்றாலும், கவிதைகள் பற்றிக் கூறும்போது ''அந்தக் காலத்தில் எழுதுவதற்கு ஓலைச்சுவடிதான் இருந்தது. அது 150 ஆண்டுகளுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். அதனால் எழுதியதை மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை மோனையுடன் கவிதை வடிவில் எழுதினார்கள். இப்போது அப்படி எழுத வேண்டியதில்லை'' என்பது அசோகமித்திரனின் கருத்து.- த.சங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !