வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிசெடிகளுடன் பேசினால் அவை நன்றாக வளரும் என்று ஆய்வாளர்கள் சொல்வது உண்மையா? ப.சுந்தரேஷ்வர், 11ம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர்.பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு, நாம் பேசும் மொழி தெரியாது. ஆனால், அன்புடனும் நேசத்துடனும் கொஞ்சும்போது, அழுகிற குழந்தை அமைதி அடைகிறது அல்லவா? அதற்குக் காரணம் பரிவு. குழந்தைகளிடம் அன்பாகப் பேசுவது என்பதே பரிவுதான்.அப்படி இருக்கும்போது, நாம் பேசுவது கேட்டோ, பாடுவது கேட்டோ செடி வளர வாய்ப்பே இல்லை. செடிகள் மீது நாம் காட்டும் பரிவு காரணமாக, வேளாவேளைக்கு போதிய நீர், உரங்கள் செடிக்குக் கிடைக்கும். ஏதாவது புல் போன்ற களைகள் இருந்தால், உடனே நாம் அகற்றிவிடுவோம். இவ்வாறு கூடுதல் கவனம் பெறும் அந்தச் செடி, மற்றதைவிட தழைத்து வளரும்தானே! இவற்றையெல்லாம் வைத்தே பேசுவதால், செடி வளரும் என்கிற தவறான கருத்திற்குள் செல்கிறோம்.ஆசைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கும் செடிகள், நன்கு செழிப்பாக வளர வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.ஒளியின் வேகத்தில் நம்மால் பயணிக்க முடியாதபோது, ஒளியின் வேகத்தை அளப்பது மட்டும் எப்படி சாத்தியப்படுகிறது?எஸ்.ஹரி விக்னேஷ், 11ம் வகுப்பு, டி.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, மதுரை.ஒளியின் வேகத்தை அளக்க கலீலியோ ஒரு முயற்சி செய்தார். தொலைவில் இருக்கிற இரண்டு மலைமுகடுகளில் விளக்குடன் இருவரை நிறுத்தினார். முதலில் ஒருவரின் விளக்கை ஏற்றச்செய்து, எதிரில் உள்ள நபருக்கு அந்த ஒளி சென்று சேர்ந்ததும், இன்னொருவரின் விளக்கையும் ஏற்றச் செய்தார். இப்போது முதல் நபர் அந்த ஒளியைப் பார்ப்பதற்கு இடையே ஏற்படும் கால இடைவெளி, இரண்டு மலை முகடுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஆகியவற்றை அளந்து, ஒளியின் வேகத்தை அளக்க முயன்றார். இதில் ஒளியின் வேகம் மிகமிகக் கூடுதல் என்பதால், கலீலியோவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 1676ல் டச்சு வானவியலாளர் ரோமெர் என்பவர், ஜூபிடர் எனும் வியாழனின் துணைக்கோள் 'இயோ' சுற்றிவரும் பொழுதைக் கணக்கிட்டு, முதன்முறையாக ஒளியின் வேகத்தை அளந்தார். இந்தப் படத்தில் S சூரியன்; பூமியும் வியாழனும் சூரியனைச் சுற்றி வருகையில் ஒன்றுக்கு ஒன்று மிக நெருங்கி இருக்கும் நிலையே E1, J1. இந்த நிலைக்குச் சரியாக ஆறு மாதம் கடந்த பின்னர், ஆண்டுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவரும் பூமி, சூரியனுக்கு மறுபுறம் செல்லும். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சூரியனைச் சுற்றும் வியாழன், சற்றே தனது நிலையில் E2, J2 என்கிற நிலையில் மாற்றம் கண்டிருக்கும். E1, J1 தொலைவைவிட E2, J2 தொலைவு மிகமிகக் கூடுதல் என்பதைக் கவனிக்கவும். எனவே, ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருந்தால், E1, J1 தொலைவைக் கடக்க ஆகும் நேரத்தைவிட E2, J2 தொலைவை கடக்க அதிக நேரம் ஆகும். ஒவ்வொரு 27.3 நாட்களுக்கு ஒருமுறை, நிலவு பூமியைச் சுற்றிவருவது போல சுமார் 1.769 நாட்களுக்கு ஒருமுறை வியாழன் கிரகத்தை, இயோ சுற்றிவரும். பூமி E1 நிலையில் இருக்கும்போது ஏற்படும் கிரகணத்தைவிட, E2 நிலையில் உள்ளபோது, கிரகணம் தாமதமாகவே நிகழ்ந்தது. ஒளி முடிவிலி வேகத்தில் செல்கிறது என்றால், காலதாமதம் இருக்கக்கூடாது. இதனால், ஒளிக்குக் குறிப்பிட்ட வேகம் உள்ளது என்றே பொருள். பூமி சுற்றுப்பாதையின் விட்டத்தைக் கொண்டு, அதைக் கடக்க ஒளிக்கு என்ன வேகம் இருந்தால் அந்த அளவு காலதாமதம் ஏற்படும் எனக் கணித்து, ஒளியின் வேகத்தை முதன்முதலில் அறிவியல்பூர்வமாக தோராயமாக ரோமர் கணக்கிட்டார். இன்றைய அறிவியல் வளர்ச்சியில், அவரது கணிப்பு அவ்வளவு துல்லியம் இல்லை என்றாலும் ஒளியின் வேகத்தை நமக்குச் சுட்டியது அவரது ஆய்வு. இதுபோன்ற பல வழிமுறைகளில் நவீன காலத்தில் ஒளியின் வேகத்தை அளவிடுகிறோம்.நமது உடலில் மச்சம் எவ்வாறு உருவாகிறது? அது ஏன் கருமை நிறத்தில் மட்டும் இருக்கிறது?ச. யுக வசந்தன், 11ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா, காரைக்குடி.பல்வேறு அடுக்குகளைக் கொண்டது நமது தோல். மேல் தோல் மற்றும் அதன் அடியில் உள்ள தோலில் தோல் நிறத்தை உருவாக்கும் நிறமிகளை உமிழும் சிறப்பு செல்களும் உள்ளன. மெலனின் எனும் நிறமியை உமிழும் சிறப்புவகை மேலானோகைட்ஸ் (Melanocytes) செல்கள், நமது தோலில் உள்ளன. இந்த மெலனின் செறிவே நமது உடலுக்கு நிறத்தைத் தருகிறது. மெலனின் வெகு குறைவாகச் சுரந்தால், தோலானது வெளிர் நிறத்திலும், கூடுதலாகச் சுரக்கும்போது, கருப்பாகவும் இருக்கும். இந்த செல் ஏதோ காரணத்தால் தவறாகவும், பழுதாகவும் தூண்டப்பட்டு, தோலில் குறிப்பிட்ட இடத்தில் கூட்டாக உருவாகிறது. அப்படி ஓரிடத்தில் சேரும் அந்தச் செல்களின் தோல் பகுதி, சூரிய ஒளியில் தூண்டப்பட்டு மச்சம் உருவாகிறது. மெலனின் கருமை நிறமி. எனவேதான், அது கூடுதலாக இருக்கும் பகுதி கருப்பான மச்சமாக மாறுகிறது.