உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகண் விழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் அடையாளங்கள்போல வேறு என்ன இருக்கின்றன?ஜி.மீனாட்சி, 12ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.பிறக்கும்போது உருவாகி, வாழ்நாள் முழுவதும் மாறாத கைரேகை, கருவிழிப் படலத்தில் உள்ள நுண் அமைப்பு, ரெட்டினா, முக அமைப்பு, கையெழுத்து, குரல் போன்றவை உயிரி அளவு (Biometric -- பயோமெட்ரிக்) அடையாளங்களாகப் பயன்படுகின்றன. தற்போது ஒருவர் நடக்கும் பாணி, அதாவது நடையைக் கூட பயோமெட்ரிக் அடையாளமாகப் பயன்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். கண்களுக்கு இடையே உள்ள தொலைவு, மூக்கின் நீளம், தாடை அமைப்பு என முகத்தின் பல்வேறு அளவுகளை அளந்து அதனைப் பயன்படுத்தி இனம் காணுவதே 'முகச்சாயல் இனம் காணும் முறை.' கைரேகை போல கருவிழியில், ரெட்டினாவில், உள்ளங்கைகளில் ரேகை அமைப்பு இருக்கும். இது வாழ்நாள் முழுவதும் மாறாது. விமானத்தின் டயர்களில் துளை (Puncture) ஏற்பட வாய்ப்பிருக்கிறதா? நா.பிரியகாந்த், 5ம் வகுப்பு, ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.சாதாரண பயணிகள் விமானம் சுமார் 38 டன் எடை இருக்கும். இவ்வளவு எடை, நீளம் கொண்ட விமானத்தைத் தரையில் ஓட்டிச் செல்ல போயிங் 777 விமானத்தில் 14 டயர்களும், ஏர்பஸ் A380ல் 22 டயர்களும், An-225ல் 32 டயர்களும் உள்ளன. இந்த டயர்கள் பெரிய டயர்களாகவும் இருப்பதில்லை. எடுத்து காட்டாக போயிங் 737 விமானம் 27x7.75 R15 வகை டயரை கொண்டுள்ளது. அதாவது 15 இன்ச் வட்டமான சக்கரத்தில் 27 இன்ச் விட்டம், 7.75 இன்ச் தடிமன் கொண்ட டயர் என்று பொருள். இந்த டயர்களில் காற்றழுத்தத்தைவிட 13.6 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் காற்று அடைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் அவற்றால் இவ்வளவு கூடுதல் பளுவைத் தாங்க முடிகிறது.வெகுவேகமாகத் தரையைத் தொடும் விமானம், முதலில் தரையில் டயரை இழுத்துச் செல்லும். அந்தச் சமயத்தில் டயர்கள் சுழலாது. அதன் பின்னரே சுழல ஆரம்பிக்கும். சைக்கிள் சக்கரம் போல இந்த டயர்களும் பஞ்சர் ஆகலாம். ஆயினும் பல டயர்கள் இருப்பதால் ஒன்று பழுதானாலும் விமானம் பாதிப்புக்கு உள்ளாகாது. கடல் வாழ் உயிரினங்கள் கடலுக்குள் தூங்குமா? தண்ணீர் படும்போது விழிப்புதானே வரும்?நா.செய்யது நிஹால், 6ம் வகுப்பு, இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, கீழக்கரை.கண்களைத் திறந்தபடிதான் மீன்கள் தூங்கும். சிலவகை சுறா மீன்களைத் தவிர, வேறு மீன்களுக்கு கண் இமை இல்லை. எனவே கண்களை மூடமுடியாது. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, தனது துடுப்பை மட்டும் அவ்வப்போது ஆட்டி ஆட்டி அவை தூங்கும் போது கனவு நிலையில் உள்ளது போன்ற தோற்றம் தரும். நீரில் மிதந்தபடி, கல்லுக்குள் மறைந்தபடி என பல்வேறு நிலைகளில் உறக்கம் கொள்ளும். சில வகை மீன்கள் இரவில் தூங்கினால் சில பகலில் தூங்கும், ஒரு சில மீன்கள் குட்டித் தூக்கம் போடும். காற்றுக்குள் வாழும் நமக்கு காற்று அடிக்கும்போது ஆழ்ந்த உறக்கம்தானே வருகிறது! அதுபோல நீரில் வாழும் உயிரினங்களுக்கு தண்ணீர் படும்போது விழிப்பு வராது. தூக்கத்தில் இரண்டு நிலைகள்1. விரைவிழி இயக்கமற்ற உறக்கம் (NREM - Non Rapid Eye Movement)2. விரைவிழி இயக்க உறக்கம் (Rapid Eye Movement)இதில் கடலில் வாழும் மீன் வகைகள் விரைவிழி இயக்க உறக்கம் கொள்வதில்லை. சற்றே ஜாக்கிரதையான விழிப்புடன் மீன் முதலிய கடல் வாழ் உயிரினங்கள் 'நாப் ஸ்லீப்' (Nap sleep) என்ற குட்டித் தூக்கம்தான் போடும். உலக மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்தி போதுமானதாக உள்ளதா?மு.சம்சுதீன் புகாரி, எம்.பி.ஏ. 2ம் ஆண்டு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.ஒரு நிமிடத்தில் சராசரியாக 7 முதல் 8 லிட்டர் ஆக்சிஜனை உள்ளே இழுக்கிறோம். உள்ளே இழுக்கும் காற்றில், சுமார் 20 சதவீதம் ஆக்சிஜன் என்றால் நாம் மூச்சை வெளியே விடும்போது அதில் 15 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. ஒவ்வொரு முறை உள்ளிழுக்கும் ஆக்சிஜனில், நான்கில் ஒரு பகுதியை மட்டுமே நமது உடல் உள்வாங்கிக் கொள்கிறது. எனவே ஒரு நாளில் நாம் சுமார் 660 லிட்டர் ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறோம். 30-40 மீட்டர் உயரமும் 50 செ.மீ. தடிமனும் உள்ள மரம் ஒரு நாளைக்கு சுமார் 92 லிட்டர் ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதாவது சராசரியாக வளர்ந்த ஏழு மரங்களின் ஆக்சிஜனை ஒரு நாளைக்கு நாம் பயன்படுத்துகிறோம். உலகில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தேவையான ஆக்சிஜனை உருவாக்க, சுமார் 4900 கோடி மரங்கள் தேவை. இன்று உலகம் முழுவதும் சுமார் 40,000 கோடி மரங்கள் உள்ளன என ஒரு மதிப்பீடு கூறுகிறது. மனிதனைத் தவிர பல்வேறு விலங்குகளுக்கும் சுவாசிக்க ஆக்சிஜன் தேவை என்பதை நினைவில் நிறுத்தவும், மேலும் மரம் மட்டுமல்ல; வேறு பல உயிரிகளும் கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியே விடுகின்றன. உலகின் 90 சதவீத உயிர்ப்பொருட்கள், ஆக்சிஜனை வெளியிடும் உயிர்த்திரள்கள்தாம். ஏதோ விபத்தில் ஆக்சிஜன் தரும் உயிரிகள், தாவரங்கள் என ஏதும் இல்லாமல் போனாலும் 5 கோடி ஆண்டுகளுக்கு, 700 கோடி மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் நமது வளிமண்டலத்தில் உள்ளது. ஆக்சிஜன் பற்றி கவலை இல்லை; வேறு இயற்கை வளங்கள் அழிவதுதான் இன்றைக்கு நாம் சந்திக்கும் பெரும் சவால்களில் ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !