வெங்கியைக் கேளுங்க
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?சோமசுந்தரம், திருப்பூர்.கண்ணுக்கு மை தயாரிப்பது போல், அந்தக் காலத்தில் தாய்ப்பாலில் எண்ணெய் விளக்கின் கரியைக் கலந்து, கருப்பான பச்சை குத்தும் மையைத் தயார் செய்தனர். இன்று இதற்காகப் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. அதைக் கொண்டு பச்சை குத்தும்போது, அந்த நிறமிப் பொருள் மேல்தோலுக்கும் அடித்தோலுக்கும் இடையே சிறைப்படும். சிறைப்பட்ட மை தோலின் ஊடே பச்சை நிறத்தில் தென்படுவதால் 'பச்சை குத்துதல்' என்கிறோம். மேல் அடுக்கு தோலைத் துளைத்து, பச்சை குத்தும் ஊசி உள்ளே செல்லும்போது, தோல் திசு ஆபத்தை உணர்கிறது. தோலின் மீது சிராய்ப்பு அல்லது காயம் ஏற்பட்டால் உடனே அப்பகுதி இரத்த நாளங்கள் மேக்ரோபேஜ்களை அளவுக்கு அதிகமாக உமிழும். காயங்களின் வழியே உள்ளே புகும் வெளிப் பொருட்களை அந்த மேக்ரோபேஜ்கள் சுற்றி வளைக்கும். பச்சை குத்தும் மையில் உள்ள நிறமிப் பொருட்களையும் விழுங்குவதால், மேக்ரோபேஜ்களில் மையின் நிறம் பரவும். சாயம் படிந்த மேக்ரோபேஜ்கள் மேல் தோல், அடித்தோல் இடையே தங்கிவிடுவதால், அந்தப் பகுதியில் தோலின் நிறம் மாறுகிறது. எல்லா உடல் செல்களையும்போல இந்த மேக்ரோபேஜ்களும் மடியும். அவ்வாறு மடியும்போது அதிலிருந்து விடுபடும் நிறமி வெளிப்பொருள் என்பதால், புதிய மேக்ரோபேஜ்கள் உடனே வந்து அவற்றை விழுங்கும். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த மேக்ரோபேஜ்கள் நிறமிப் பொருளை தக்கவைத்துக் கொள்வதால், பச்சை குத்தியது நீண்ட காலம் அழியாமல் நீடிக்கிறது. தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது? யானையால் அப்படி முடியுமா?கோ.வ. நந்தகுமார், 5ஆம் வகுப்பு, நகராட்சி நடுநிலைப் பள்ளி, சிதம்பரம்.இழுவைப் பணிக்காக வளர்க்கப்படும் குதிரைகளின் எடை ஒரு டன் என்றாலும், அவற்றால் இரண்டு டன் சுமையை இழுத்துச் செல்ல முடியும். யானையும் மற்ற விலங்குகளைவிட அதிக அளவு சுமையை இழுத்துச் செல்லும். பொதுவாக, விலங்குகளின் எடையில் 10 சதவீதம் மட்டுமே எலும்பு; யானையில் இது 20 சதவீதம். எனவே, யானை கூடுதல் பளு தாங்கும் தன்மை கொண்டுள்ளது.அதன் எடையை போல சுமார் ஆயிரம் மடங்கு எடையை எறும்புகள் சுமந்து செல்வதை ஓர் ஆய்வில் கண்டுபிடித்தனர். இதற்கான காரணம் கொள்ளளவுக்கும் மேற்பரப்புக்கும் இடையே உள்ள கணித உறவுதான். எடுத்துக்காட்டாக, ஒரு செ.மீ. நீளம் x அகலம் x உயரம் உடைய ஒரு கனசதுரத்தைக் கணக்கில் கொள்ளுங்கள். அதன் மொத்தக் கொள்ளளவு 1 கனசதுர செ.மீ. அதற்கு ஆறு பக்கம் இருப்பதால், அதன் மொத்த மேற்பரப்பளவு 6 சதுர செ.மீ. ஆகும். இதனால் கொள்ளளவும் மேற்பரப்பு விகிதமும் 1:6 என அமைகிறது.இப்போது 10 செ.மீ. அகலம், நீளம், உயரம் உடைய கனசதுரத்தை எடுத்துக்கொள்வோம். அதன் மொத்தக் கொள்ளளவு 1000 கனசதுர செ.மீ. அதன் மேற்பரப்பு 600 சதுர செ.மீ. அதாவது கொள்ளளவு மேற்பரப்பு விகிதம் 10:6 என வெகுவாக மாறிவிட்டது. இங்கே கொள்ளளவு என்பது, எடை எனவும் மேற்பரப்பு என்பதை திசுவின் ஆற்றல் எனவும் கொள்ளலாம். ஆகவே உருவில் சிறிய விலங்குகளின் திசு ஆற்றல் கூடுதலாக இருக்கும். எறும்பு போன்ற சிறிய உயிரினங்களின் இயக்கத்தைக் கூர்ந்து ஆராய்ந்து கற்பதன் மூலம், நவீன ரோபோ தயாரிப்பு முதலியவற்றில் புதுமை காணமுடியும் எனக் கருதி, ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?டி.ரேவதி, 10ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, மன்னார்குடி.வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லை என்பது ஒரு கட்டுக்கதை. உருவில் பெரிய வகை வௌவால்கள் மனிதனைவிட மூன்று மடங்கு கூர்மையான பார்வைத் திறன் கொண்டவை. பொதுவாக, எல்லா வௌவால்களுக்கும் பார்வை உண்டு என்றாலும், இவை இரவில் நடமாடும் விலங்கு என்பதால், கண் பார்வையைவிட ஒலியை ஏற்படுத்தி, ஒலியின் எதிரொலியை வைத்து 'எதிரொலி இடமாக்கம்' (Echolocation) எனும் முறையில் பொருட்களை இனம் காண்கிறது. ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?ச.சக்திவேல், திருப்பூர்.'பில்லியன் இதயத் துடிப்புகள்தான் வாழும் காலம்' என்ற ஒரு கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு விலங்கும் சுமார் ஒரு பில்லியன் இதயத் துடிப்புகள் வரையே வாழும் என்கிறது இந்தக் கருதுகோள். வேக வேகமாக நிமிடத்துக்கு 150 முறை இதயத் துடிப்பு கொண்ட பூனை 15 ஆண்டுகளும், சுமார் நிமிடத்துக்கு 30 முறை இதயத் துடிப்பு கொண்ட யானை 70 ஆண்டுகளும் வாழ்கிறது. அதாவது, மெதுவாக இதயம் துடிக்கும் விலங்குகள் நீண்ட ஆயுளையும், வேக வேகமாக இதயம் துடிக்கும் விலங்குகள் குறைவான ஆயுளையும் கொண்டுள்ளன. வேக வேகமாக இதயத் துடிப்பு என்றால், வளர்சிதைமாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்று பொருள். எனவே, ஆயுள் குறைவாக உள்ளது. மனிதனைத்தவிர மற்ற விலங்குகளில் தோராயமாக இந்தக் கருதுகோள் பொருந்தி வந்தாலும், ஏன் இப்படி அமைந்துள்ளது என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.