உள்ளூர் செய்திகள்

ஆட்டிசத்தை கண்டறியும் ரத்தப் பரிசோதனை

ஆட்டிசக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பதற்கான ரத்தப் பரிசோதனை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது அறிவியல் துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இப்போதைய விஞ்ஞான வளர்ச்சியில், குழந்தைக்கு 18 மாதங்கள் ஆன பிறகே ஆட்டிசக் குறைபாட்டைக் கண்டறிய முடியும். அதுவும் மருத்துவப் சோதனைகள் மூலமாக அல்ல. அக்குழந்தையின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்கும் பெற்றோர் அல்லது கவனிப்பாளர் தரும் தகவல்களைக் கொண்டே கண்டுபிடிக்க முடியும்.தற்போது பிரிட்டனைச் சேர்ந்த, வார்விக் (Warwick) பல்கலைக்கழகத்தில், நைலா ரப்பானி என்ற விஞ்ஞானியின் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், உடல் பரிசோதனை ஒன்றின் மூலம் ஆட்டிசக் குறைபாட்டை உறுதிசெய்யும் வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டிச மூலக்கூறுகள் (Molecular Autism) எனும் ஆய்வேட்டில் இப்பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.இந்த ஆய்வில், 5 முதல் 12 வயது வரையிலான 68 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 38 பேர் ஆட்டிச நிலையாளர்கள். இவர்கள் அனைவருக்கும் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதில், ஆட்டிச நிலையாளர்களான குழந்தைகளின் ரத்த பிளாஸ்மாவில் இருக்கும் சில புரோட்டீன் மூலக்கூறுகள் பாதிப்படைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும் மூளை செல்களான நியூரான்களுக்கு போதிய அமினோ அமிலங்கள் கிடைக்காத நிலை இருப்பதையும் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.இந்தப் பரிசோதனை முறை 90 சதவீதம் வரை துல்லியமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இத்துறையின் தொடர் பரிசோதனைகள், இதன் துல்லியத் தன்மையை மேலும் உயர்த்தலாம். இதன் மூலம் ஆட்டிச பாதிப்பை உறுதிப்படுத்தும் முதல் உடல் சார்ந்த பரிசோதனையாக இம்முறை இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !