அழகான புன்னகை!
நம்பிக்கை“புத்தாண்டு எப்படி தொடங்குச்சு, கதிர்?” என்று உமா மிஸ் கேட்டபோது, எனக்குப் பதில் தெரியவில்லை. வழக்கம்போல் தான் அன்று இருந்தது. தூங்கி எழுந்து பார்த்தால், மறுநாள் விடிந்திருந்தது. பழைய நாட்காட்டி தொங்கிய ஆணியில், புதிய நாட்காட்டி. அப்பா, அம்மா தொலைபேசிகளில் பலர் வாழ்த்துச் சொல்லியிருந்தனர். இதையெல்லாம் சொன்னபோது, உமா மிஸ்,“ஏன் நம்பிக்கையே இல்லாம பேசறே? புத்தாண்டுங்கறது ஒரு காரணம். நம்மோட முயற்சிகளை, எதிர்பார்ப்புகளை புதுப்பிச்சுக்கறதுக்கு கிடைக்கும் வாய்ப்பு. அதைத் தவறவிடலாமா?”நான் அமைதி காத்தேன். என் முகத்தைப் பார்த்த உமா மிஸ், தொடர்ந்தார், “நான் படிச்ச ஒரு விஷயத்தைச் சொல்றேன், கேளு. நம்பிக்கைங்கறது எவ்வளவு பெரிய விஷயம்னு புரியும். நேபாள நாடு தெரியுமில்லையா? அங்கே 2015இல பூகம்பம் ஏற்பட்டுச்சு. அப்போ அங்கே தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு போட்டோகிராபரான ஒமர் ஹவானா எழுதின கட்டுரையைப் படிச்சேன். அவர் சொல்றார்,'ஏப்ரல் 25, 2015ஐ நான் மறக்கவே மாட்டேன். அன்றுதான் காத்மாண்டுவில் நான் முதல் பூகம்பத்தை அனுபவித்தேன். வீடு நகர்ந்துகொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஆடத் தொடங்கியது. சாலைக்கு ஓடிவந்து பார்த்த போதுதான், என்ன நடந்தது என்பது புரிந்தது. மக்களுடைய முகங்களில் அவ்வளவு அச்சம். அது மிகப்பெரிய பூகம்பம். பல நாட்கள் சாலைகளில் படுத்துத் தூங்கினோம். ஒவ்வொரு சாலையிலும் ஏராளமான இடிபாடுகள். போலீஸும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் இடிபாடுகளுக்குள்ளே யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.இரண்டாம் நாள் முதல் நான் காத்மாண்டுவுக்கு வெளியே இருந்த பக்தாபூர் என்ற இடத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அங்கேதான், ஒரு சில நாட்களுக்கு முன்பு, பிஸ்கெட் ஜாட்ரா என்ற மிகப்பெரிய மகிழ்ச்சித் திருவிழா நடந்தது. அப்போது கோலாகலமாக இருந்த இடம் தற்போது, போர்க்களமாகக் காட்சியளித்தது. ஏராளமானோரின் உடல்களைத் தூக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.வலியும் வேதனையும் என்னை ஆட்கொண்டது. பின்னர் எனது திருமணத்துக்காக பிரான்ஸ் சென்றுவிட்டேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் காத்மாண்டு வந்தேன். பூகம்பம் ஏற்பட்ட இடங்கள் அப்படியே தான் இருந்தன. ஆனால், வேறு ஏதோ ஒன்று மாறிக்கொண்டே இருந்தது. அங்கே நம்பிக்கை பிறந்திருந்தது. வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டு இருந்தது. “நாங்கள் மீண்டெழுவோம்” என்ற செய்தி எல்லா இடங்களிலும் கேட்கத் தொடங்கியது.நேபாள மக்கள், உலகத்துக்கே ஒரு செய்தி சொல்லிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால், உலகம் அதைக் கவனிக்கவில்லை. அந்தச் செய்தியை நான் படம் பிடிக்கத் தொடங்கினேன். நான் எடுத்த ஆயிரக்கணக்கான படங்களில் ஒரு படம் என் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்திருக்கிறது.அதில் ஒரு சிறுவன் பள்ளிக்கு நடந்து போவான். அன்றுதான் காத்மாண்டுவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்குப் போவதற்கு, பக்தாபூர் சதுக்கத்தை கடந்துதான் அந்தச் சிறுவன் போகவேண்டும். அங்கே தான் கட்டடங்கள் இடிந்து 27 பேர் மரித்துப்போயிருந்தனர். அதனால், பக்தாபூர் சதுக்கத்தைச் சுற்றியே நிறைய படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அங்கே இருப்பவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். அந்தச் சதுக்கம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிய இடம். தற்போது, அங்கே கட்டடங்களின் இடிபாடுகள் மட்டுமே இருந்தன.ஒரு நாள், ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர் இடிபாடுகளுக்கு இடையே இருந்த ஓர் ஓட்டை வழியே உள்ளே போய்வந்தார். அந்தக் கட்டடம் மேலும் இடிந்துவிடலாம். ஆனாலும் அவர் உள்ளே போய் சில காகிதங்களையும் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அதைப் பலமுறை அவர் செய்தார். எனக்குப் பயமாகப் போய்விட்டது. எங்கே கட்டடம் இடிந்துவிடுமோ என்ற பயத்தில் அவர் அருகே ஓடினேன். அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தேன். அவர் லேசாகப் புன்னகைத்து விட்டு, “நேபாளத்தை மறுகட்டமைப்புச் செய்யவேண்டும். எல்லோரும் கட்டடங்களில் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. நேபாளத்துக்கு ஏராளமான பிரச்னைகள் உண்டு. அதில் பூகம்பமும் ஒன்று. ஆனால், இந்த நாட்டை மறுகட்டமைப்புச் செய்யவேண்டும் என்றால், நமக்குத் தேவை கல்வி.நான் என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்துவிட்டேன். வீட்டை இழந்துவிட்டேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஆனால், எனக்கு ஒன்பது வயது மகள் இருக்கிறாள். அவள் தான், நேபாளத்தின் எதிர்காலம். இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்யப்போவது அவளது கல்விதான். அதனால் தான், ஒரு தந்தையாக, நான் என் வீட்டின் இடிபாடுகளில் இருந்து அவளது புத்தகங்களையும் நோட்டுகளையும் எடுத்துவருகிறேன். இந்த நாடு, கட்டடங்களால் கட்டமைக்கப்படாது. நேபாளம், கல்வியால்தான் மறுகட்டமைப்புச் செய்யப்படும்” என்றார் அவர்.ஜூலை 20ஆம் தேதி, பக்தாபூரில் இருந்த இரண்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அமைதியாக இருந்த சாலைகளில் மீண்டும் பிள்ளைகளின் கொண்டாட்டமான ஒலி கேட்கத் தொடங்கியது.நான் பள்ளிக்குப் போகும் மாணவர்களின் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். கடைசியில், மகிழ்ச்சியான போட்டோக்களை எடுக்க வாய்ப்புக் கிடைத்ததே என்று நினைத்துக்கொண்டேன். காத்மாண்டு திரும்பலாம் என்று நினைத்தபோது, ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது.அப்போது, அங்கே ஒரு சிறுவன், ஏழு வயது இருக்கும்... அவன் தன் முதுகுப்பையை மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் போய்க்கொண்டு இருந்தான். அந்தச் சதுக்கத்தில் அவன் மட்டுமே தனியாக இருந்தான். அவனது தளர் நடை என் கவனத்தைக் கவர்ந்தது. அவனது நிதானமாக நடையில் ஏதோ விசேஷம் இருந்தது. நேபாளத்தில் மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டதில், அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியையே அந்த நடை பிரதிபலித்ததாக எனக்குத் தோன்றியது. அது, முன்பு நான் பேசிய தந்தையின் குரலை ஞாபகப்படுத்தியது. கல்வியின் மூலமே மீண்டும் நேபாளம் கட்டமைக்கப்படும் என்றார் அவர்.அத்தனை சிரமங்களுக்கு நடுவேயும் மீண்டும் நேபாளம் தலைநிமிர்ந்து வருவதை உலகத்துக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். அந்தச் சிறுவனைப் பின் தொடர்ந்து ஒரு சில புகைப்படங்கள் எடுத்தேன். அவனது முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அவனுக்கு முன்னால் ஓடிப்போய், அவனைப் பார்த்து புன்னகைத்தேன். ஆனால், போட்டோ எடுக்கவில்லை. அந்தச் சிறுவனது அழகான புன்னகையை நான் என் வாழ்வில் மறக்கவே மாட்டேன்.அந்தப் புகைப்படத்தை இப்போது என் மேஜை மீது வைத்துள்ளேன். வாழ்க்கையில் எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று சொல்லும் புகைப்படம் அது. அந்தச் சிறுவன் புன்னகைத்தபடியே, வாழ்க்கையில் நடந்து முன்னேறுவது எப்படி என்று எனக்குச் சொல்லிக்கொடுத்தான். அவனுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவன்.'இதுதான் உண்மையான நம்பிக்கைங்கறது கதிர். எத்தனை துயர் வந்தாலும், கைவிடக்கூடாத சொத்து, நம்பிக்கை. ஞாபகம் வெச்சுக்கோ.” அந்தப் புகைப்படம் என் மனக்கண் முன் வந்து நின்றது. அதன் உத்வேகம் என்னுள்ளும் உருவானது.