வலக்கை அல்ல; தன்னம்பிக்கையே முக்கியம்!
கோபாலு - 18.06.1924 - 29.04.2015சவால்வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் என்றால் தேர்வுகள் தான். ஒவ்வொரு தேர்விலும், ஆசிரியர்கள் கேள்வித்தாள் தயாரிக்கக் கூடாது என்றே கருதுவேன். அவர்கள் நன்கு படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள். அவர்களுடைய புத்திசாலித்தனத்துக்கு ஏற்ப கேள்விகளைத் தேர்வு செய்கிறார்கள். அதனால் தான், அது சிரமமாக இருக்கிறது. சோதனையாக இருக்கிறது.மாணவர்களையே கேள்வித்தாளை உருவாக்கச் சொன்னால் எப்படி இருக்கும்? சிரமம் தெரிந்தவர்கள் உருவாக்கும்போதுதானே, அதற்கான கருணையோடு கேள்விகள் வரும்! என் யோசனையைக் கேட்டுவிட்டு, உமா மிஸ் சிரித்தார்.“உனக்குப் பதில் எழுதறது கஷ்டமா இருக்கா? படிக்கறது கஷ்டமா இருக்கா?”கொஞ்சம் யோசித்தேன். படித்துவிடுகிறேன். ஆனால், படித்தது மட்டுமே தேர்வில் கேட்கப்பட வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு. அது நடைபெறுவதில்லை. அல்லது தெரிந்த பதிலாக இருந்து, அதை எழுதினாலும் முழுமையாக மதிப்பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது. பிரச்னை எங்கே?“தெரியலை மிஸ். எல்லாமே கஷ்டமாத்தான் இருக்கு. எதுவுமே சுலபமா இல்லை. பல சமயங்கள்ல எரிச்சலா இருக்கு.”உமா மிஸ் பார்வையில் தெரிந்த கனிவும் கருணையும் எனக்கு மிகுந்த நம்பிக்கை தந்தன. “எல்லாமே நாம் நினைக்கிறது மாதிரி நடக்கறதில்ல, கதிர். அதுதான் இந்த வாழ்க்கையோட சுவாரசியம். எதிர்பாராத விஷயம் நடந்துட்டாலும், அதைச் சமாளிக்கறதுதான் சவால். ஓவியர் கோபுலுவைத் தெரியுமா, உனக்கு?”“எங்கம்மா அவரைப் பத்தி நிறைய சொல்வாங்க மிஸ். அவ்வளவு அழகா கார்ட்டூன் போடுவாராமே?”“கரெக்ட். கார்ட்டூன் போடறதுல மாமேதை. அரசியல், சமூகம்ன்னு எல்லாத்தைப் பத்தியும் விமர்சனம் உண்டு. அதையெல்லாம் நகைச்சுவையோட கார்ட்டூனா போடுவார். புகழ்பெற்ற கதைகளுக்கு ஓவியங்கள் வரைஞ்சிருக்கார். அவரோட வண்ணத் தேர்வும், ஸ்ட்ரோக்ஸும் பார்க்கப் பார்க்க அழகு. முதல்ல, பத்திரிகைத் துறை, பின்னாடி விளம்பரத் துறைன்னு நிறைய வேலைகள் செஞ்சிருக்கார். அவருக்குப் பெரிய சோதனை.”“என்ன சோதனை மிஸ்?”“திடீர்னு பக்கவாதத்தால, படம் போடற வலது கை, செயற்படாமல் போயிடுச்சு. ஓர் ஓவியனுக்கு இதைவிடப் பெரிய சோகம் வாழ்க்கையில இருக்க முடியுமா? தன் கற்பனைகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கு வலது கைதானே அவசியம். அது விழுந்து போனா, என்ன செய்ய முடியும்? ஒருவகையில், வாழ்க்கை அவர் முன்னால வெச்ச சவால் அது.”“ஓ! அதுக்கு என்ன பண்ணாரு மிஸ்?”“மருத்துவர்கள் தைரியம் கொடுத்தாங்க. பக்கவாதத்தால மூளைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்ல. வலதுகை தான் செயல் இழந்திருக்கு.இடது கையால ஓவியம்போட முயற்சி செய்யுங்கன்னு சொன்னாங்க. கோபுலு அதைச் செய்ய ஆரம்பிச்சார். இடது கையால ஓவியங்கள் வரைவதற்கு முயற்சி செய்ய ஆரம்பிச்சார்.கொஞ்சம் யோசிச்சுப் பாரு. வேற யாரேனும் இதைச் செய்திருக்க முடியுமா? பக்கவாதம்னா உடனே, மனசு தளர்ந்து போயிடும். சோர்வும் விரக்தியும் ஏற்பட்டுடும். இனிமே படமே வரைய வேண்டாம்னு ஒதுங்க ஆரம்பிச்சிருப்பாங்க. ஆனால், அதையும் ஒரு சவாலா எடுத்துக்கிட்டார் கோபுலு. ஒண்ணு புரிஞ்சுக்கோ கதிர். இந்த உலகத்துல மகிழ்ச்சியும் வெற்றியும் முன்னேற்றமும் மட்டும் இல்ல; வலியும் வேதனையும் தோல்வியும் சரிவுகளும் உண்டு. மகிழ்ச்சியைத் தாராளமா கொண்டாடலாம், ஆனால், தோல்வியில் துவண்டு போயிடக் கூடாது. அதுதான் சவால். மன உறுதியைச் சோதிக்கற சவால்.பெரும்பாலானவங்க, சவாலைப் பார்த்தவுடனே, பதுங்க ஆரம்பிச்சுடுவாங்க. அதைச் சந்திக்க துணிச்சல் வேணும். திட்டம் தீட்டணும். சவால சாதனையா மாத்திக்கத் தெரியணும். கோபுலு அதைத்தான் செஞ்சார். உனக்கு வந்திருப்பது ஓர் இடர், அது சவால்கூட இல்லை என்பதை நீ புரிஞ்சுக்கணும்.”“ஓ! இதைச் சவால்னுகூட சொல்ல முடியாதா மிஸ்?”“ஆமாம். தேர்வுங்கறது இடர் கூட இல்லை. உன்னுடைய குழப்பம். அவ்வளவுதான். இடர்னா, ஒரு விஷயத்தைத் தொடர்ச்சியா செய்யமுடியாமல், தற்காலிகமாக பாதிப்பு அடையறது. கஷ்டம்னா, நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தறது. உடல் ரீதியான குறைபாடுகள் ஏற்படும்போது, அது கஷ்டம். கோபுலு சாருக்கு ஏற்பட்டது கஷ்டம். அதையே அவர் சமாளிச்சு எதிர்கொண்டார். அவர் இடதுகையால போட்ட ஓவியங்களும் அவ்வளவு அழகா இருந்துச்சு.”“ஓ!”“ஆமா. அவர் தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்தார். படிப்படியாக, கொஞ்ச காலத்துல, அவருடைய வலதுகையும் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிச்சுது. அதுதான் அவரோட ஈடுபாட்டுக்கும் ஓவியத் திறனுக்கும் உள்ள அங்கீகாரம். கோபுலு சாரை அவருடைய ஓவியங்களுக்காக மட்டுமல்ல; அவருடைய தன்னம்பிக்கைக்காகவும் நாம் கொண்டாடறோம்.”உமா மிஸ் சொல்லி முடித்தபோது, என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. இனி வேறு மாதிரி யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.