பிரித்து- சேர்த்து எழுதுகிறீர்களா?
சொற்களைச் சேர்த்து எழுதுவதிலும், பிரித்து எழுதுவதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சேர்த்து எழுத வேண்டிய சொற்களைப் பிரித்தோ, பிரித்து எழுத வேண்டிய சொற்களைச் சேர்த்தோ எழுதிவிடக் கூடாது. அவ்வாறு எழுதினால் நாம் உணர்த்த விரும்பிய பொருள் முற்றிலும் மாறிவிடும். பிரித்து எழுதுவதற்கும், சேர்த்து எழுதுவதற்குமிடையே பொருள் வேறுபடும் இடங்கள் நிறையவே உள்ளன. சொல்லுருபுகள் பல பொருள்தரும் சொற்களாகவும் இருக்கின்றன. அவற்றைத் தனியே பிரித்து எழுதவே கூடாது. எடுத்துக்காட்டாக, கண் என்பது ஏழாம் வேற்றுமை உருபு. கண் என்பது பார்வைக்குரிய உறுப்பும் ஆகும். மலைக்கண் திரிவோர், மனைக்கண் புகுவிழா என்பனவற்றில், கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபு வருவதை அறியலாம். 'அவன்கண் இல்லை' என்றால், அவனிடத்திலே இல்லை என்பது பொருள். 'அவன் கண் இல்லை' என்றால் அவனுக்குக் கண் இல்லை என்று பொருளே மாறிவிடும். அதனால் வேற்றுமை உருபுகளை ஒருபோதும் பிரித்து எழுதக்கூடாது. அதுபோலவே இடம், உடன் போன்ற சொற்களையும் கவனமாகக் கையாளவேண்டும். 'அவனிடம் கொடுத்தான்' என்று சேர்த்து எழுதினால் 'அவனிடத்தில் கொடுத்தான்' என்னும் பொருளை உணர்த்தும். 'அவன் இடம் கொடுத்தான் ' என்று பிரித்து எழுதினால், அவன் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்தான், உட்காருவதற்கோ நிற்பதற்கோ இடம் கொடுத்தான் என்று பொருளாகிவிடும். அதனால், இடம் என்னும் சொல்லை நன்கு உணர்ந்து பயன்படுத்த வேண்டும். அவனுடன் வந்தான் என்றால், அவனோடு கூடச்சேர்ந்து வந்தான் என்று அறிவோம். அவன் உடன் வந்தான் என்று பிரித்தெழுதினால் வேறு பொருள் கிடைப்பதைப் பாருங்கள். அவன் உடனே வந்தான் என்கிற பொருள்தான் கிடைக்கிறது. சில வினைச்சொற்களிலும் இதைப் போலவே பிரித்தெழுதினால் பொருள் மாறுகின்ற இடங்கள் இருக்கின்றன. வரவழைத்தான் என்றால், வரச்செய்தான் என்பது பொருளாகும். வர அழைத்தான் என்று பிரித்தெழுதினால் வரும்படி அழைத்தான், வருவதற்கு அழைத்தான் என்று பொருளே மாறிவிடும். 'சிந்தித்தும் ஆய்ந்தும்' என்பதை முறையாகப் பிரித்து எழுதுவதுதான் நல்ல உரைநடையாகும். 'சிந்தித்துமாய்ந்தும்' என்று சேர்த்து எழுதினால் “சிந்தித்தே மாய்ந்தும்” என்கிற தவறான பொருளுக்கும் இடமிருப்பதை அறியலாம். 'கடை பிடித்தான்' என்பதை பிரித்தெழுதினால், கடையைப் பிடித்தான் என்பது பொருளாகும். கடைப்பிடித்தான் என்று எழுதினால்தான் பின்பற்றினான் என்னும் பொருளைத்தரும். 'கை பற்றினான்' என்றால் எழுவாய்த் தொடராகி, கையைப் பற்றினான் என்னும் பொருள் கிடைக்கும். கைப்பற்றினான் என்றால்தான், ஒன்றை அடைந்துவிட்டான் என்னும் பொருள் கிடைக்கும். 'கொடுவாள்' என்பது கொடுமை விளைவிக்கிற வாள் என்னும் பண்புத்தொகை. 'கொடு வாள்' என்று பிரித்தெழுதினால் “வாளைக் கொடுப்பாயாக” என்று பொருளே மாறிவிடும். ஆக, எவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும், எங்கே சேர்த்து எழுத வேண்டுமோ அங்கே சேர்த்துத்தான் எழுத வேண்டும். எங்கே பிரித்து எழுதவேண்டுமோ அங்கே முறையாகப் பிரித்து எழுத வேண்டும். பிரிக்கவோ சேர்க்கவோ மறந்துவிட்டால், பொருளே கெட்டுப்போய்விடும். - மகுடேசுவரன்