கணினியின் தந்தை!
சார்லஸ் பாப்பேஜ் 26.12.1791 - 18.10.1871இங்கிலாந்துகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். அப்போது, கணிதப் பாடங்களில் ஏராளமான பிழைகள் இருப்பது கண்டு அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரிசெய்ய ஒரு கருவியை உருவாக்க எண்ணினார். அதற்காகவே கணிதத்தில், வகைக் கணித சமன்பாடுகளை (Differential Equations) தீர்வு செய்து, தானாகக் கணக்கிடும் கருவியை 1822இல் கண்டுபிடித்தார். இது வகைக் கணிதப் பொறி (Difference Engine) எனவும் அழைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய இயந்திரம் நீராவியால் இயங்கியது. துளைகளைக் கொண்ட அட்டைகளைச் செருகியதன் மூலம் இந்தக் கருவியின் நிரல் (Program) இயங்கியது. அது கணக்கீடுகளைச் செய்து விடையைத் தானாக அச்சிட்டுத் தந்தது. இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்தவர் சார்லஸ் பாப்பேஜ்.வேறுபாட்டுப் பொறியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 1834ஆம் ஆண்டில் கணிதத்தையும், இயந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். அவருடன் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான அடா லவ்லேஸ் வடிவமைப்பில் உதவ, ஆணைகள் அடங்கிய நிரலை (Program) உருவாக்கினார். இதன்மூலம் உலகின் முதல் கணினி நிரலர் (Computer Programmer) என்னும் பெருமையை அடா பெற்றார். ஒரு நிமிடத்திற்கு 60 வகையான கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை இந்த நிரலால் தீர்க்க முடிந்தது. இந்த இயந்திரம் நவீன கணிப்பொறி போன்றே இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும், அதிகாரப்பூர்வமாக 1948ஆம் ஆண்டில்தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு டிரான்சிஸ்டர் (Transistor) கண்டுபிடிக்கப்பட்டு அதுவரை இருந்த வெற்றிடக் குழல் (Vacuum Tube) மாற்றப்பட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகள் உருவாகின. கணினியின் மூலம் இந்த உலகமே நம் கைகளில் தவழக் காரணமாக இருந்த சார்லஸ் பாப்பேஜை சிறப்பிக்கும் விதமாக, அவரது மூளை இங்கிலாந்திலுள்ள ஹண்டேரியன் காட்சியகத்தில் (Hunterian Museum) இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.