ஏபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி
கணிதத் துறையில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படுவது, ஏபல் பரிசு. நோபல் பரிசுக்கு இணையாது இப்பரிசு. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டிற்கான ஏபல் பரிசுக்கு, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் காரன் கெஸ்குலா ஊலென்பெக் (Karen Keskulla Uhlenbeck) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெறுகிறார்.கடந்த 40 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் கணிதப் பேராசிரியர் இவர். அறிவியலாளராக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர் கணித அறிஞராக ஆகிவிட்டார்.கணிதத் துறைக்கு இயற்பியல் துறைக்கும் பாலமாக இருந்தவை இவரது ஆய்வு முயற்சிகள். கணிதத்தின் இரண்டு முக்கியமான விஷயங்களுக்குப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒன்று காஜ் தியரி (Gauge Theory). மற்றொன்று, ஜியாமெட்ரிக் அனாலிசஸ். இரண்டாவது துறைதான் சுவாரசியமானது. அதாவது, முப்பரிமாண வடிவங்கள் எப்படி நடந்துகொள்கின்றன என்பதை இவர் ஆய்வு செய்தார். உதாரணமாக, ஒரு சோப்பு குமிழியை ஊதினால், அது தன்னை நிலையாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ப, தன்னுடைய வடிவத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பதைக் கண்டுபிடித்தார் ஊலென்பெக். இதன்மூலம், பல்வேறு முப்பரிமாண பொருட்கள் மற்றும் கூறுகளின் தன்மைகளை ஊகிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.1942இல் கிளீவ்லாந்தில் பிறந்த ஊலென்பெக், சிறுவயதில் ஏராளமான புத்தகங்களைப் படித்தார். கல்லூரி வரும்வரை அவருக்கு கணிதத்தின் மீது அவ்வளவு ஆர்வமில்லை. கல்லூரியில் கணிதம் பயில ஆரம்பித்தவுடன், “கணிதத்தின் வடிவம், அழகு, எழில் ஆகியவை என்னை உடனே ஆட்கொண்டுவிட்டது, நான் என் மனத்தைப் பறிகொடுத்துவிட்டேன்,” என்றார்.ஏபல் பரிசு தகவல் அவருக்கு வந்தபோது, அவர் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். குறுஞ்செய்திகளைப் பார்த்துவிட்டு, பின்னர், ஏபல் குழுவினருக்கு தொலைபேசியில் அழைத்தபோது, அவர்கள், பரிசை உறுதிப்படுத்தியுள்ளனர். “கொஞ்ச நேரத்துக்குப் பெருமிதம் அடைந்தேன். இந்தப் புகழில் என்னை இழந்துவிடாமல் நிலைத்து நிற்கமுடியும் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.தனது வாழ்நாள் முழுவதும் கணித ஆய்விற்காக அர்ப்பணித்த பேராசிரியர் காரன் கெஸ்குலா ஊலென்பெக். ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரியம் மிர்சாகாணி, பீல்ட்ஸ் பதக்கம் பெற்றார். தற்பொழுது, காரன் ஏபல் பரிசைப் பெற்றுள்ளார். இவ்விருவர் கணிதத்தின் மிகச் சிறந்த பரிசுகளைப் பெற்றதன் மூலம், சாதிக்க விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளனர்.