விண்ணிலிருந்து மண்ணுக்கு (2)
பாலுவுக்கு, ஹார்மோனிகா வாசிக்கப் பிடிக்கும். அவன் அதில் முதலில் வாசிக்கக் கற்றுக்கொண்டது 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்' பாட்டுதான். ஞாநி மாமாதான், அவனை லேட்டஸ்ட் பாட்டெல்லாம் வாசிக்கக் கற்றுக் கொள்ளும்படி உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்.இன்று மாமாவுடன் பாலு வந்தபோது ஹார்மோனிகா கொண்டு வந்திருந்தான். ஹெவி ஹோம்ஒர்க் செய்து களைத்துப் போயிருந்த எனக்கு, கொஞ்சம் பாட்டு கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியது. அவனை ஹார்மோனிகா வாசிக்கச் சொன்னேன். வாசித்தான். ஆனால் நடு நடுவே 'ம்', 'அம்மா', 'அய்யோ' என்று முனகிக்கொண்டே வாசித்தான். “ஏண்டா நடுநடுவுல முனகறே?” என்றேன்.“கழுத்துல பலமான சுளுக்கு இருக்கு. கொஞ்சம் தலையை அப்படி இப்படி அசைச்சு வாசிச்சா வலிக்குது” என்றான். பாலுவுக்கு வாரம் ஒரு தரமாவது ஏதாவது இப்படி ஆகும். கையிலோ காலிலோ அடிபட்டுக் கொள்வான். சுளுக்கு வரும். வயிற்று வலி, தலைவலி ஏதாவது வரும். வாலு ஒரு நாள் சொல்லிற்று - “அடால்ஃப் சாக்ஸ், சாக்ஸஃபோன் கண்டுபிடிச்ச மாதிரி பாலுவும் எதிர்காலத்துல ஏதாவது இசைக்கருவி கண்டுபிடிப்பான்.”அடால்ஃப் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இசைக் கருவி வடிவமைப்பாளர் (1814- - 1894). சிறு வயதில் அடால்ஃபுக்கு வாராவாரம் ஏதாவது விபத்து ஏற்பட்டு அடிபட்டுக்கொண்டே இருக்குமாம்.மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து தலையில் அடி. மூன்று வயதில் ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, ஒரு பின்னையும் விழுங்கிவிட்டார். வெடிமருந்து தீப்பற்றியதில் உடல் முழுக்கத் தீ பிடித்துக் கொண்டது. இரும்பை உருக்கிக்கொண்டிருந்த வாணலியில் விழுந்து காயம். அறையில் வைக்கப்பட்டிருந்த வார்னிஷிலிருந்து வந்த வாயுவால் மூச்சுத் திணறல். ஆற்றில் விழுந்து மூழ்கி மீட்கப்பட்டார். அடால்ஃப் பல விதமான காற்று இசைக் கருவிகளை வடிவமைத்தார். அதில் மிகவும் பிரபலமாக இன்று வரை இருப்பது சாக்ஸஃபோன்.பிரபலமான இசைக் கருவிகளை உருவாக்கியபோதும் அடால்ஃப் பெரும் பணக்காரராக இல்லை. வறுமையில் வாடித்தான் இறந்திருக்கிறார்.இந்த மாதிரி பிரச்னைகளுக்கு பாலுவுக்கு விசித்திரமான தீர்வுகள் தோன்றும். “ஏதாவது வேறு கிரகத்துக்குப் போய் நிறைய பணம் கொண்டு வந்துவிட வேண்டும். அப்புறம் கவலையில்லாமல் நாம் விரும்பிய வேலையை செய்துகொண்டிருக்கலாம்.” என்பான்.“வேற்று கிரகத்தில் நம்ம ஊர் பணம் மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறது என்று உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டேன். “பல நாடுகள் விண்வெளிக்கு கலங்களை அனுப்பி கிரகங்களை ஆராய்வது, அங்குள்ள தாதுப் பொருட்களை நாம் எடுத்து பயன்படுத்த முடியுமா என்று பார்க்கத்தான் என்று நான் சொன்னதை பாலு இப்படி புரிந்து கொண்டிருக்கிறான்.” என்றார் மாமா.“வேற்று கிரகங்களில் உள்ளவர்களும் அதேபோல இங்கே வந்து பார்த்துவிட்டுப் போகலாம் இல்லையா?”“முதலில் வேற்று கிரகங்களில் ஏதாவது உயிரினம் இருக்கிறதா என்றே நமக்கு இன்னமும் தெரியாது.” என்றார் மாமா. “அப்படியானால் அடிக்கடி பறக்கும் தட்டுகளில் வந்து போகிறவர்கள் யார்?” என்று கேட்டான் பாலு.“ஏதோ அப்படி வந்தவர்களை நீயே பார்த்த மாதிரி சொல்கிறாயே” என்று சிரித்த மாமா, “இதுவரை அப்படி வேற்று கிரகவாசிகள் வந்ததை யாரும் இன்னும் நிரூபிக்கவில்லை” என்றார்.ஆனால் 60, 70 வருடமாக உலகத்தில் பல நாடுகளில் பலர் தாங்கள் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் பார்த்ததாகச் சொன்னவர்கள். அந்த வேற்றுகிரக விண்கலம் தேநீர் கோப்பை வைக்கும் சாசர் தட்டு மாதிரி இருந்ததாகச் சொன்னதிலிருந்து அவற்றுக்கு 'பறக்கும் தட்டு' என்று பெயர் வந்துவிட்டது.அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் அரசாங்கங்கள் பறக்கும் தட்டுகள் பற்றியும், வேற்றுகிரகவாசிகள் பற்றியும் ஆய்வுகள் நடத்தியிருக்கின்றன. எந்த ஆய்விலும் தட்டோ, கிரகவாசிகளோ இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் பறக்கும் தட்டு ஆதரவாளர்கள் இந்த அரசாங்கங்கள் எல்லாம் உண்மையை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். அரசாங்க உளவுத்துறையினர் ரகசியமாக வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூட சிலர் நம்புகிறார்கள்.இன்னும் சிலர் தங்களை வேற்று கிரகவாசிகள் வந்து கடத்திச் சென்று சில நாட்கள் வைத்திருந்து திரும்பக் கொண்டு வந்து விட்டுவிட்டதாகவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்றது வாலு. எல்லாம் கதைதான். எதற்கும் இதுவரை எந்த நிரூபணமும் இல்லை. “பழைய கிரேக்க, இந்திய புராணங்களில் சொல்லப்படும் தேவதைகள், தேவர்கள், அசுரர்கள் எல்லாமே வேற்றுகிரகவாசிகள்தான் என்றும், அப்போது அவர்கள் பூமிக்கு வந்து போனதைத்தான் நம் முன்னோர்கள் புராணமாக எழுதிவைத்திருப்பதாகவும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார் மாமா. “சூப்பர் கற்பனையாக இருக்கிறது. அந்த மாதிரி ஒரு டிஸ்கவரி சேனல் டாக்குமென்டரி நான் பார்த்திருக்கிறேன்” என்றேன்.ஏலியன்ஸில் நம்பிக்கை உள்ள சிலர் ஆண்டுதோறும் 'உலக தொடர்பு தினம்' கூட கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் வேற்று கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்புகிறார்கள். “எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறோம்.” என்பது அந்தச் செய்தி. ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் அனுப்புகிறார்கள், ஏலியன்களுக்கு இதில் ஏதாவது ஒரு மொழி புரிந்துவிடும் என்ற நம்பிக்கையில்!இந்த மாதிரி செய்தி அனுப்புவதே ஆபத்து. ஏலியன்கள் நம்மை விட அதி புத்திசாலிகளாக இருந்தால், நம்மை அழித்து பூமியை எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்.“ஏலியன்ஸை விட முக்கியமான வேறொன்று இருக்கிறது. அதன் பெயர் நெய்பர்ஸ். இந்த பூமியில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரரைக் கூட தெரிந்துகொண்டு சிநேகமாக இல்லாமல், ஏலியன்சுக்காக ஏன் ஏங்கவேண்டும்?” என்றார் மாமா.எல்லாரும் ஆமோதித்தோம். உடனே இன்று வீட்டில் செய்த வெங்காய பகோடாவை ஒரு டிபன் பாக்சில் எடுத்துக்கொண்டு அடுத்த வீட்டில் இருக்கும் சேவியர் குடும்பத்தைப் பார்க்க நான்கு பேரும் கிளம்பினோம்.வாலுபீடியா 1: உலக Unidentified Flying Object தினம் ஜூன் 24, ஜூலை 2 ஆகிய நாட்களில் அனுசரிக்கப்படுகிறது. இரண்டுமே பூமியில் அமெரிக்காவுக்கு பறக்கும் தட்டு வந்ததாக சொல்லப்பட்ட தினங்கள்.வாலுபீடியா 2: வேற்றுகிரக வாசிகள் பற்றிய கதைகள் அமெரிக்க சினிமாவில் பிரபலம். இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பறக்கும் தட்டு, வேற்று கிரகவாசிகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளன