கண்ணுக்குத் தெரியாத இயந்திரங்கள்!
2016ல் வேதியியல் நோபல் பரிசு இதற்காகத்தான்! வழக்கமாக, இயந்திர பொறியாளர்கள்தான் இயந்திரங்களை வடிவமைப்பார்கள். ஆனால், அந்த இயந்திரங்கள் நம் முடியை விட மெல்லிய அளவில் இருக்க வேண்டும் என்றால், அது வேதியியல் பொறியாளர்களால் மட்டுமே முடியும்!ரிச்சர்ட் ஃபெயன்மேன் என்ற இயற்பியலாளர், 1959ல், மிக மிகச் சிறிய அளவிலான இயந்திரங்களை உருவாக்க முடியும் என்ற சிந்தனையை முன் வைத்தார். இவற்றைச் சாத்தியப்படுத்துவதற்கு, அணுக்களை வைத்து பாகங்களை உருவாக்க வேண்டும் என்றார். இந்தப் புதுமையான சிந்தனையால் ஊக்குவிக்கப்பட்டு, பல வல்லுனர்கள் அணு அளவு இயந்திரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களில் முதன்முதலில் வெற்றி கண்டவர்கள்,1. ழான் பியர் சாவேஜ் (JeanPierre Sauvage)2. ஃப்ரேஸர் ஸ்டோட்டர்ட் (Fraser Stoddart)3. பெர்னார்ட் ஃபெரிங்கா (Bernard Feringa)இவர்களுக்குத்தான் இந்த ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டு உள்ளது.அணுக்களின் சங்கமம்தான் மூலக்கூறு. மூலக்கூறில் உள்ள அணுக்கள், வேதிப் பிணைப்பால் கட்டப்பட்டு இருக்கும். இதுவே, வேதிப்பிணைப்பு அல்லாமல், சாதாரண இயந்திர பாகங்களைப் போல அணுக்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து, ஒரு அணு சங்கிலியை 1983ல் உருவாக்கினார் பியர் சாவேஜ்.இந்த இயந்திர முறை இணைப்பை மேம்படுத்தி, மூலக்கூறு அச்சையும், சக்கரத்தையும், 1993ல் உருவாக்கி, அதைச் சுற்ற வைத்தும் காண்பித்தார் ஃப்ரேஸர் ஸ்டோட்டர்ட். தொடர்ச்சியாக, 1999ல் பெர்னார்ட் ஃபெரிங்கா, மூலக்கூறு அளவிலான மோட்டார் (Motor) ஒன்றை உருவாக்கினார். அதை வைத்து, அதைவிட 10,000 மடங்கு பெரிய கண்ணாடி உருளை ஒன்றைச் சுற்றிக் காண்பித்தார்! இந்தத் தொழில்நுட்பம், வரும் காலத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளைக் கொண்டு சேர்க்க பேருதவியாக இருக்கும்.