தீவுகளில் கிடைத்த தீர்வு!
நீங்கள் பிரியாணி சாப்பிடும்போது, தேவையில்லாத பொருள் என, தூக்கிப் போடும் கிராம்புக்கு எவ்வளவு மதிப்புத் தெரியுமா? 18,19ஆம் நூற்றாண்டில் தங்கத்துக்கு இணையான மதிப்பைக் கொண்டிருந்தது. உலர்ந்த பூக்களின் மொட்டுகள்தான், கிராம்பு. இதற்கு இயற்கையிலேயே நல்ல நறுமணம் உண்டு. காரத்தன்மை கொண்டது. இதன் மொட்டுகள், முதலில் மங்கலான வெண்மை நிறத்தில் இருக்கும். அதையடுத்து, பச்சை நிறத்தில் மாறும். மூன்றாவதாக, அடர்த்தியான சிவப்பு நிறத்தில் மாறும்போதுதான், அறுவடைக்குத் தயாராகும். இந்தக் கட்டத்தில் கிராம்பு அறுவடை செய்யப்படும்.தாயகம்!தொடக்க காலத்தில், ஐந்தே ஐந்து தீவுகளில் மட்டுமே கிராம்பு விளைந்தது. ஸ்பைஸ் தீவுகள் என அழைக்கப்படும் இந்தோனேஷியாவில்தான் கிராம்பு கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய கிழக்கு பகுதியினரும், ஐரோப்பியர்களும்தான் இதைக் கண்டுபிடித்தார்கள். கொலம்பஸ் இந்தத் தீவுக்குத்தான் வரவேண்டும் என நினைத்தார், ஆனால், பாதை மாறி வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டார். தற்போது, இந்தோனேஷியா, மடகாஸ்கர், இந்தியா, ஸ்யாந்ஸிபார், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சமைக்கும் முறை!இந்தியச் சமையலில் தேநீர், மசாலா போட்டு செய்யும் உணவு பொருட்களான பிரியாணி, பன்னீர் மசாலா, ராஜ்மா மசாலா, சில வகை இனிப்புகள் என, பல வித உணவு வகைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. மெக்சிகோ சமையலில் கிராம்பு, பட்டை, சீரகம் ஆகிய மூன்றும் கலந்த பொடியைத்தான் சமையலில் நறுமணத்திற்குச் சேர்ப்பார்கள். வியட்நாம் உணவு வகைகளிலும் வாசனைக்காக கிராம்பு சேர்க்கும் பழக்கம் உண்டு. நெதர்லாந்து மக்கள் சீஸ் உணவு வகைகளில்கூட, கிராம்பு சேர்ப்பார்கள். மருத்துவப் பயன்கள்!உங்களுடைய சிறு வயதில் பல் வலி வந்தபோது, அம்மா என்ன கொடுத்தார்கள் என்று நினைவிருக்கிறதா? ஆம்! கிராம்புதான். உலகம் முழுவதும் பல் வலி என்றதும் கிராம்புதான் எல்லோருக்கும் நினைவிற்கு வருகிறது.தற்போது சந்தையில் இதன் மதிப்பு அதிகம். சமீபத்தில் நடந்த ஆய்வில், இதய நோய்களைக் கிராம்பு குணமாக்கும் என்று மருத்துவக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.