மொக்கை மஞ்சு.. ஷார்ப் சாந்தி...
சாந்தி: மஞ்சு, களிமண் பொம்மை மாதிரி அசையாம இருக்கியே, ஏன்?மஞ்சு: உனக்கும் அப்படித்தான் தெரியுதா? களிமண்ணு மாதிரி இருக்காதேன்னு இப்பதான் அம்மாவும் திட்டினாங்க. அதான் சோகமா இருக்கேன்.சா: ஓ... இதுதான் சோகமா! 'களிமண்ணை ஈரம் காயும்முன் பொம்மையாக்கு'ன்னு ஆப்ரிக்கப் பழமொழி ஒண்ணு இருக்கு தெரியுமா?ம: என்னை ஆப்ரிக்க களிமண் பொம்மைன்னு சொல்ல வர்றியா?சா: கம்முன்னு இரு. களிமண் சாதாரணமானது இல்லை. பண்டைக் காலத்துலருந்தே பயன்பாட்டுல இருக்கு. பல அகழ்வாராய்ச்சிகள்ல கிடைச்ச ஓடுகள், முதுமக்கள் தாழிகள் எல்லாமே களிமண்ணால ஆனதுதான்.ம: முதுமக்கள் தாழின்னா களிமண் நகைதானே? எனக்கும் தெரியும்.சா: அடிப்பாவி. அது தாலி இல்லை. தாழி. 'தாழி'ன்னா பெரிய வாய் இருக்குற மண்பானை. நீ சொல்ற களிமண் நகைகளை 'டெரகோட்டா'ன்னு சொல்லலாம்.ம: ஆஹா... தப்பாப் புரிஞ்சுகிட்டு கொஞ்சமா கோட்டை விட்டுட்டேன் சாந்தி.சா: களிமண்ணுல கோட்டையே கட்டும்போது நீ கோட்டை விடுறதுல தப்பு இல்லை மஞ்சு.ம: ஹஹ்ஹா... அப்பாடா... எனக்கு சப்போர்ட் பண்ற களிமண் கோட்டைகள் எங்க இருக்கு?சா: சவுதி அரேபியாவின் மஸ்மக் கோட்டை, இலங்கையில யாழ் கோட்டை, கோல்கொண்டா கோட்டை எல்லாம்தான்.ம: நீ சொல்றதை எல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்கணும். அட்லீஸ்ட் பேப்பர்லயாவது எழுதி வச்சுக்கணும்.சா: நீ லேட் மஞ்சு. மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னாலயே முக்கியமான குறிப்புகள ஈரக் களிமண்ணுல எழுதி, காயவச்சுப் படிச்சிருக்காங்கன்னா பாத்துக்கோ!ம: ம்ம்ம்... அடிக்குற வெயில்ல நாமளும் களிமண் மாதிரிதான் காயுறோம் இல்லையா?சா: அதுக்குத்தான் களிமண்ணுல செஞ்ச பானைத் தண்ணியைக் குடிக்கணும்ன்னு ரொம்ப காலமாச் சொல்றாங்க.ம: இனிமே யாராச்சும் களிமண்ணுன்னு திட்டுனா காலம் கடந்தது களிமண்ணுன்னு நீ சொன்னதை எல்லாம் சொல்லுவேன்.