காற்றைக் காப்பாற்றுவோம்
லண்டனில் சில புறாக்களின் முதுகில், பையைக் கட்டி அனுப்பியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்தப் பையில் இருப்பவை புத்தகங்கள் அல்ல, அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள். இவற்றைக்கொண்டு லண்டனின் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று எந்த அளவு நலமாக இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். காற்றுக்கு என்ன பிரச்னை? காற்றில் ஆக்ஸிஜன் ஏறக்குறைய 21% இருக்கிறது. நைட்ரஜன் வாயு 78% இருக்கிறது. அப்படியானால், நாம் சுவாசிக்கும்போது நைட்ரஜனும் உள்ளே போகிறதா?ஆமாம். ஆனால், அதைப் பற்றிக் கவலை வேண்டாம். இந்த நைட்ரஜன் மூச்சை இழுக்கும்போது உள்ளே செல்லும். வெளிவிடும்போது வெளியே வந்துவிடும்.நைட்ரஜனோடு உள்ளே போன ஆக்ஸிஜன் நமது உடலில் கலக்கிறது. நாம் உயிர்வாழ உதவுகிறது.சரி, ஆக்ஸிஜன் 21%, நைட்ரஜன் 78%, மொத்தம் 99% தானே வருகிறது? மீதமுள்ள 1%? ஆர்கன், கார்பன்டைஆக்ஸைடு உள்ளிட்ட சில உதிரிவாயுக்கள்தான் அந்த 1%. ஆக, ஆக்ஸிஜன், நைட்ரஜன், மற்ற வாயுக்கள் என்கிற கலவைதான் காற்று. இதைத்தான் சுவாசிக்கிறோம். இந்தச் சுமுக நிலை வெகுநாள் நீடிக்குமா? சந்தேகம்தான். வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலைகளின் புகை, மரங்கள் குறைவது... இவற்றால் வருங்காலத்தில் காற்று மிகவும் அசுத்தமாகிவிடலாம். இப்போதே உலகில் பல நகரங்களில் காற்று மாசு ஒரு பெரிய பிரச்னைதான். உதாரணமாக, சல்ஃபர் ஆக்ஸைடுகள், நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களும் இன்னும் பல நுண்துகள்களும் காற்றில் கலந்து மாசுபடுத்துகின்றன. இவற்றைத் தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்குப் பிரச்னைகள் வரலாம்.ஆகவே, நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். லண்டன் புறாக்கள் தொடங்கி, உங்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், வண்டிகளெல்லாம் இதைதான் அளக்கின்றன. காற்றின் சுத்தத் தன்மையைத் தெரிவிக்கின்றன; எச்சரிக்கின்றன.காற்று மாசைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்? * குறைந்த தூரத்துக்கு நடந்தோ சைக்கிளிலோ செல்லலாம். * பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தினால், புகை, மாசு குறையும்.* தாவரங்கள் வளர்க்கலாம்.* மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். மின்சார உற்பத்திக்காகக் காற்று மாசு படுவதைக் குறைக்கலாம்.