வனவிலங்குகளைக் காக்க ஒருங்கிணைவோம்!
வன விலங்குகள் பாதுகாப்பில் காடுகளை, காப்புக் காடுகளாகவோ அல்லது சரணாலயங்களாகவோ அறிவிப்பதால் மட்டும் பயனில்லை என்பதை இந்தியாவில் நடந்த சில நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அசாமில் யானைகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரயில் பாதையில் அடிபட்டு இறப்பதும், மின்வேலியில் சிக்கி இறப்பதும் தொடர்கதை நிகழ்வு. காடுகள் சுருங்குவது முதன்மைக் காரணம். அடுத்து, ஒவ்வொரு துறையும் வனவிலங்குகளையும் சுற்றுச்சூழலையும் மனதில் கொள்ளாமல் வணிக லட்சியத்தில் செயற்படுகின்றன. மேலும் துறைகளுக்கிடையில் புரிதலோ அல்லது ஒத்துழைப்போ அறவே கிடையாது.உதாரணமாக, அண்மையில் தேனி மேகமலை சரணாலயத்தில் நிகழ்ந்த யானைகளின் இறப்பைச் சொல்லலாம். மின்துறை, உயர்அழுத்த மின் கம்பிகளை வனத்தில் ஒரு கோபுரத்தில் இருந்து அடுத்த கோபுரத்துக்குக் கொண்டு செல்லும்போது, அதிக உயரத்தில் அமைக்காமல் விட்டது. இதன் விளைவாக, மலைச் சரிவுகளை ஒட்டிய பகுதிகளில் அவை 6 அடிக்கும் குறைவான உயரத்தில் இருந்தன. அவ்வழியே யானைக் கூட்டங்கள் இடம் பெயர்ந்தபோது, மின்சாரம் தாக்கியதன் விளைவு, ஆறு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.மின்கம்பிகளை அமைக்கும்போதே மின் துறையும், வனத்துறையும் கூடி ஆலோசனை செய்திருந்தால் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மின்துறைக்கு வனவிலங்குகளைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. எனவே, துறைகளுக்கிடையில் (Inter departmental) புரிதலும் நல்லுறவும் தேவை என்பது விளங்குகிறது. அதோடு, வன விலங்கு பாதுகாப்பை ஒட்டு மொத்த அரசுத் துறைகளின் கூட்டு முயற்சி மற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தின் கரிசனமும் சேர்ந்துதான் பலப்படுத்த முடியும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் உணர்வு எல்லோருக்கும் இருந்தால் மட்டுமே வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் வெற்றிபெற முடியும்!- சு.சந்திரசேகரன்