உள்ளூர் செய்திகள்

மூதாதையர்களைத் தேடி...

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் அத்தனை செய்திகளையும் கணினி முன் அமர்ந்தபடி இணையத்தில் பார்த்துவிடலாம். ஆனால் உண்மையான அனுபவத்தை நேரில் கண்டும், கேட்டும், தொட்டும் தான் உணர முடியும். அப்படிபட்ட அனுபவத்தைத் தருபவை அருங்காட்சியகங்கள். மனிதன் தன் வரலாற்றை ஆவணப்படுத்தத் தொடங்கியதன் நவீன வடிவம்தான் அருங்காட்சியகம் (Museum -- மியூசியம்). நாகரிகங்கள், வரலாறு, அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சி நிலைகளை, அவை தொடர்பான பொருட்களை காட்சிப்படுத்துவதன் மூலம், நம் ஏட்டறிவை விசாலமாக்குகின்றன அருங்காட்சியகங்கள். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியம், புதுப்பித்தல் பணிகள் பெருமளவு முடிவுற்று புதிய தலைமுறை பார்வையாளர்களுக்காக காத்திருக்கிறது.இது 1851ம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்தக் காலத்திலிருந்தே இங்கு பதப்படுத்தப்பட்டுப் பாடம் செய்யப்பட்ட விலங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திற்குள்தான் கன்னிமாரா பொது நூலகமும் தொல்லியல் துறை அலுவலகமும் உள்ளன. தொல்லியல், மானிடவியல், விலங்கியல், புவியியல், தாவரவியல், படிமக் கூடம், சிறுவர் அருங்காட்சியகம், தேசியக் கலைக்கூடம், வளர்கலைக் கூடம் உட்பட பல பிரிவுகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் உண்டு.இது 16.25 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கட்டடங்களை ஒட்டி நூறாண்டுகள் பழமையான பீரங்கிகள் இடைவெளிவிட்டு அணிவகுக்கின்றன. வளாகம் முழுவதும் பசுமை போர்த்தியுள்ளது. சேரர், சோழர், பல்லவர் காலத்து கலைநயம் மிக்க சிற்பங்களும் சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த இடங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மிக அரிய பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நம் முன்னோரின் முதுமக்கள் தாழியையும் இங்கு பார்க்கலாம். இந்தியாவில் பழையான லிபியான பிராமி எழுத்துகள் பொறித்த கல்வெட்டுகள் உள்ளிட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறைச் சொல்லும் கல்வெட்டுகள், சிற்பங்கள் இங்குண்டு. விலங்கியல் பகுதியில் யானையின் முழுமையான எலும்பு கூடு வரவேற்கிறது. அந்தக் கூடத்தின் கூரையை ஒட்டி, நம் தலைக்கு மேலாக சுமார் 60 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கல எலும்புக்கூடு தொங்க விடப்பட்டுள்ளது. அற்புதமாக பாடம் செய்யப்பட்ட பறவைகள், பாம்புகள், ஆமைகள், முதலைகளை இங்கு காணலாம். டைனோசர் காட்சிக்கூடமும் உண்டு. சிங்கம், புலி, கரடி, குரங்குகள், குதிரை என பல்வேறு விலங்குகள் பாடம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தாலும், காண்பதற்கு உயிர்ப்புடன் இருக்கின்றன.மானிடவியல் பகுதியில் தமிழரின் படைக்கலங்கள், பழங்கால இசைக் கருவிகள், நாட்டார் கலைகளுக்கான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிமக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிற்பங்கள் நம் சிற்பிகளின் திறமைகளை புரிந்துகொள்ள உதவுகிறது. பழங்கால நாணயங்களையும் காணலாம். சிறுவர் அருங்காட்சியகத்தில் பண்டைய கலாசாரங்கள், நாகரிகங்கள், அறிவியல் துறைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தேசிய ஓவிய காட்சிக்கூடத்தில் இந்திய சிற்றோவியங்கள், பிற இந்திய மரபு ஓவியங்கள், பிரிட்டிஷ் கால ஓவியங்கள் என ரசிக்க வைக்கும் அணிவகுப்பு நம் கண்ணைக் கவருகின்றன.மொத்தம் 47 கூடங்கள், 12 ஆயிரம் காட்சிப் பொருட்களுடன் இருக்கும் எழும்பூர் அருங்காட்சியகத்தைக் காண ஒரு நாளைக்கு சராசரியாக 800 முதல் 1,000 பேர் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அருங்காட்சியகம் இயங்குகிறது. வெள்ளிதோறும் விடுமுறை. சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 கட்டணம் என்றாலும், கேமராவில் நிழற்படம் எடுக்க ரூ.200, வீடியோ படம் எடுக்க ரூ.500 வசூலிக்கப்படுகிறது.-செல்வன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !