உள்ளூர் செய்திகள்

நாணித் தலைகவிழ்ந்த திருத்தங்கி

பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களில் ஔவையாரைப் போல் மக்களிடத்தில் புகழ்பெற்றவர் வேறு யாருமல்லர். தாம் கூற வரும் கருத்தைக் கேட்போர் மனத்தில் தைக்கும் தன்மையோடு வெளிப்படுத்தியவர். அகவை மூத்த பெண்பாற் புலவர் என்றாலே ஔவையார்தான் நம் நினைவுக்கு வருபவர். அவருடைய அகவையும் ஓரிடம் நில்லாத தன்மையும், அக்காலத்து நிலைமைகள் பலவற்றையும் தமது செய்யுட்களில் பாடும்படி ஆக்கின. படைக்கலக் கருவியின் புகழ்பாடி அதியமானின் மறம் உணர்த்தி, நடக்கவிருந்த போரையே நிறுத்திய சொல்வன்மைக்குரியவர் ஔவையார். சிலர் 'ஔவையார்' என்பதை 'அவ்வையார்' என்று எழுதுகின்றனர். அவ்வாறு எழுதாமல் 'ஔவையார்' என்றே எழுத வேண்டும். (ஔ என்பது ஓர் உயிர் எழுத்து. அதனை 'அவ்' என்று உயிரெழுத்தாகவும் மெய்யெழுத்தாகவும் பிரிக்கக் கூடாது).அக்காலத்தில் புலவர் பெருமக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார்கள். ஒவ்வோரிடத்திலும் வாழும் வள்ளல்களைக் கண்டு பாடி, அவர்கள் கொடையாகத் தருவதைப் பெற்று வாழ்வார்கள். அக்காலத்துச் செல்வர்கள் தமிழ்பாடும் புலவர்களைப் பெரிதும் மதித்தார்கள். அவர்கள் தம்மைப் புகழ்ந்து பாடுவதை விரும்பிக் கேட்டார்கள். வயிறார உணவிட்டு தம்மால் இயன்ற பொருளைக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.ஔவையார் ஒருமுறை குடந்தை நகருக்குச் சென்றிருந்தார். அங்கே மருத்தன், திருத்தங்கி என்னும் செல்வர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். அவ்விருவரில் மருத்தன் என்பவர் வந்தோருக்கு எல்லாம் உணவிட்டு உண்பவன். வீடு தேடி வந்த யாரையும் விருந்தென்றே கருதுபவன். மருத்தனின் வீட்டுக்கு ஔவையார் சென்றபோது, அவரை வரவேற்று விருந்தளித்து மகிழ்வித்தார். அவரிடம் சில நாள் தங்கியிருந்த ஔவையார், அவ்வூரின் இன்னொரு செல்வனான திருத்தங்கி வீட்டுக்கும் சென்றார். திருத்தங்கியோ எதையும் பிறருக்கு ஈயாதவன். அவனிடம் எதைக் கேட்டாலும் 'இல்லை' என்றே சொல்வான். வந்திருப்பவர் புலவர் என்பதால் அவரிடம் தன்னைப் பற்றிப் பாடுமாறு வேண்டி நின்றான். அவன் வருவோருக்கு 'இல்லை' என்பதையே தொழிலாகக் கொண்டிருப்பதை உணர்ந்த ஔவையார், ஒரு பாடலைப் பாடினார்.'திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும்இலையும்இலை, பூவும்இலை, காயும்இலை, என்றும்உலகில் வருவிருந்தோர் உண்டு''திருத்தங்கி வளர்க்கும் வாழை மரங்கள் தேன்பழங்களாகப் பழுத்து நிற்கின்றன' என்று ஔவையார் அவனை புகழத் தொடங்கியதும், திருத்தங்கி மகிழ்கிறான். அடுத்த அடியில் திருக்குடந்தையின் அடையாளமாக இன்னொரு செல்வரான மருத்தனைக் கூறுகிறார்.மருத்தன் வீட்டு வாழை மரங்களில் குருத்து இல்லை. இலையும் இல்லை. அவற்றை விருந்தினருக்கு உணவு படைக்கத் தொடர்ந்து அறுத்துக்கொள்கிறான். வாழைப்பூவும் இல்லை, காயும் இல்லை. அவற்றை விருந்தினருக்குக் கறியாக்கப் பறித்துக் கொள்கிறான்.அவனுடைய வீட்டுக்கு உலகிலுள்ள விருந்தினர்கள் அனைவரும் வந்து உண்டு செல்கிறார்கள். அதனால் திருக்குடந்தையின் புகழ் சொல்லும் மருத்தனின் வாழை மரங்களில் குருத்தும், இலையும், பூவும் இல்லை, காயும் இல்லை என்று முடிக்கிறார் ஔவையார். திருத்தங்கி எல்லோரிடமும் சொல்லும் சொல்லான 'இல்லை' என்பதைப் பாடலில் வைத்துப் பாடிய ஔவையார், புகழ்வது போல் அவனை இகழ்ந்தார். ஔவையாரின் சொற்களால் நாணித் தலைகவிழ்ந்த திருத்தங்கி, மேலும் ஈயாக்குணத்தோடு இருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள்?- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !