உள்ளூர் செய்திகள்

வலி மிகுதல் - 15: வினைமுற்றுத் தொடருக்கு வலி மிகாது

பெயர்ச்சொல்லை முதல் சொல்லாகக் கொண்டுதான் ஒரு சொற்றொடர் தொடங்க வேண்டும் என்பதில்லை. வினைச்சொல்லை முதல் சொல்லாகக்கொண்டும் வரலாம். 'கண்ணன் வந்தான்' என்று சொல்லும்போது பெயர் முன்னும், வினை பின்னும் வந்தன. 'வந்தான் கண்ணன்' என்றும் அதே சொற்றொடரைச் சொல்லலாம். இப்போது வினை முதலாகவும் பெயர் பின்னாகவும் வந்திருக்கின்றன. பெயரை முதலில் உணர்த்த வேண்டும் என்றால், 'கண்ணன் வந்தான்' என்று எழுவாய்த் தொடராகக் கூறுவோம். நடந்த வினையைத்தான் முதலில் உணர்த்த வேண்டும் என்றால் 'வந்தான் கண்ணன்' என்று வினையை முதலில் அமைத்துக் கூறலாம். அதனால்தான் அனுமன் இராமனிடம் 'கண்டேன் சீதையை' என்று நடந்த வினையை முந்தித் தெரிவிக்கும் வகையில் தெரிவித்தான். கண்ணன் வந்தான் என்ற எழுவாய்த் தொடருக்கு வலி மிகல் இல்லை. 'வந்தான் கண்ணன்' என்பது என்ன வகைத் தொடர்? ஒரு தொடரில் எவ்வகைச்சொல் முதலில் வருகிறதோ அதன்படியே அத்தொடரும் அழைக்கப்படும். விளிச்சொல் முதலில் வந்தால் அது விளித்தொடர் (கண்ணா வா). 'வந்தான் கண்ணன்' என்பதில் வந்தான் என்னும் வினைமுற்று, முதல் சொல்லாக வந்ததால், அது வினைமுற்றுத் தொடர்.முதற்சொல் வினைமுற்றாக அமைந்து அதனை அடுத்து, அந்த வினையோடு தொடர்புடைய பெயர்ச்சொல் வருவது வினைமுற்றுத் தொடர் எனப்படும். எழுவாய்த் தொடர் - வினைமுற்றுத் தொடர்வள்ளி சிரித்தாள் - சிரித்தாள் வள்ளிகுழந்தை குழறியது - குழறியது குழந்தைபறவை பறந்தது - பறந்தது பறவைபரிதி தோன்றுகிறது - தோன்றுகிறது பரிதிஓர் எழுவாய்த் தொடர் எவ்வாறு வினைமுற்றுத் தொடராக மாறுகிறது என்பது விளங்கிற்றா? எந்தத் தொடருக்கும் வலி மிகாது என்பதே அடிப்படை. அதன்படி வினைமுற்றுத் தொடருக்கும் வலி மிகாது.மேற்கூறிய எடுத்துக்காட்டுகளான 'குழறியது குழந்தை, பறந்தது பறவை, தோன்றுகிறது பரிதி' ஆகிய வினைமுற்றுத் தொடர்களில் எங்கும் வலி மிகவில்லை. 'ஆயிற்று சோறு, போயிற்று காலம்' என்று வன்தொடர்க்குற்றியலுகர ஈற்றெழுத்து வந்தாலுமேகூட வினைமுற்றுத் தொடருக்கு வலி மிகாது. - மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !