மலையாள அகராதிப் பணியில் தமிழ் ஆராய்ச்சியாளர்
எஸ்.வையாபுரிப் பிள்ளைதோற்றம்: 12-10-1891மறைவு: 17-02-1956தமிழில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர்களில் முக்கியமானவர் எஸ்.வையாபுரிப் பிள்ளை. தமிழ் இலங்கியங்களின் காலங்களை ஆய்வு செய்தவர் என்பதால், 'கால மொழி ஆராய்ச்சியாளர்' என்ற சிறப்புக்குரியவர். தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்ச், ஜெர்மன் இவர் அறிந்த மொழிகள்.பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வழக்கறிஞர், கதையாசிரியர், கவிஞர் என, பன்முகத் திறமை கொண்டவர். பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டையில் முடித்தார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அப்போது சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக, 'தங்கப் பதக்கம்' வாங்கினார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். அப்போது இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கி பிரபலமானார்.உ.வே.சாமிநாத ஐயருக்குப் பிறகு, பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வுசெய்து வெளியிட்டவர் என்ற பெருமைக்குரியவர். 1926ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் 'தமிழ்ப் பேரகராதி'யை உருவாக்கும் பணியில் இறங்கியது. அதற்காக ஒரு குழுவை அமைத்தது. அந்த ஆய்வுக்குழுவுக்கு, இவர் தலைவராகப் பொறுப்பேற்றார்.7 தொகுதிகள், 4,351 பக்கங்களைக் கொண்டு 'தமிழ் - தமிழ் - ஆங்கிலம்' என்ற வடிவில் இப்பேரகராதி தொகுக்கப்பட்டது. 1926 முதல் 1939ஆம் ஆண்டு வரை இப்பணி நடந்தது. இதில், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், வானியல், சோதிடம், கணிதம், சித்த மருத்துவம் போன்ற நூல்களில் இருந்து சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. தெற்காசிய மொழிகளுள் மிகச் சிறந்த அகராதியாக, இந்தத் தமிழ்ப் பேரகராதி போற்றப்படுகிறது.1936ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவரானார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயற்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார். பின்னர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தார்.மலையாள மொழி சொற்களஞ்சியம் உருவாக்கும் குழுவிலும், இவர் உறுப்பினராக இருந்துள்ளார். சுப்பிரமணிய பாரதி, வ.உ. சிதம்பரம் பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளை நட்புக் கொண்டிருந்தார். வ.உ.சி., இளம்பூரணரின் 'தொல்காப்பிய உரை'யைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி சரி செய்தார். தமிழின் மறுமலர்ச்சி, கம்பன் காவியம், திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, இலக்கணச் சிந்தனைகள் போன்ற ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.- த. சங்கர்