உள்ளூர் செய்திகள்

நன்மை தீமைகளைக் கடந்து வந்தோம்!

2019ஐ நினைவு கூரும்போது, சூழல் பற்றிய சில முக்கிய நிகழ்வுகள் நெஞ்சை விட்டு அகலாமல் நிற்கின்றன. தென் அமெரிக்காவின் மிகப்பெரிய மழைக்காடான, அமேஸான் காடுகள் காட்டுத்தீயால் பற்றி எரிந்தது. இந்தப் பாதிப்பின் மீட்புப் பணிகளுக்கு, பிரபல நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ உதவினார். தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான எர்த் அலையான்ஸ் (Earth Alliance) என்ற அமைப்பிலிருந்து, பிரேசிலுக்கு 70 லட்சம் ரூபாயை வழங்கி வியக்கவைத்தார். இத்தீயை அணைப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, பிரேசில் நாட்டை உலக நாடுகள் பலவும் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம் அது. டிகாப்ரியோவின் நிதியுதவி, தனி மனிதனின் மிகப்பெரிய பங்களிப்பாகும்.தென் ஆப்பிரிக்காவின், போட்ஸ்வானா பகுதியில் புதிய வனக் கொள்கை அமலாகியுள்ளது. இதனால், காப்புக் காடுகளுக்கு வெளியே வரும் விலங்குகளை வேட்டையாடலாம். இச்சட்டம் யானைகளுக்கு மட்டுமன்றி, பிணந்தின்னி கழுகுகளுக்கும் பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. காரணம், யானைகள் உணவு தேடி விளைநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு வரும்பொழுது, அவற்றைக் கொன்றால் அது குற்றமாகாது. அந்த வேட்டையை மறைக்க விஷம் வைப்பதால், உண்ண வரும் கழுகுகளும் மடிந்து விஷயம் மூடிமறைக்க எளிதாகிவிடும். இதோடு, துப்பாக்கியில் பயன்படுத்தும் ஈயக்குண்டுகள், அவற்றின் சிறுநீரகத்தைப் பாதிக்கின்றன. இதன் காரணமாக, அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.இந்தியாவின் வடகிழக்கு, மேற்கு வங்கம், தமிழகம், கேரள மாநில வனப் பகுதிகளில் இரயிலில் அடிபட்டு இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கோவை - வாளையார் பகுதியில் ஓர் இளம் ஆண் யானை இரயிலில் அடிபட்டு இறந்துள்ளது. மத்திய அரசின் இருவேறு துறைகள் அமர்ந்து பேசி முடிவெடுக்காதது இப்பாதிப்புக்கு முக்கிய காரணம். மனிதத் தவறுகளால், பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை!வனத்துறையின் கடைநிலை ஊழியர்கள், விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. காட்டைக் காக்கும் முன்னோடி படையினர், கடைநிலை ஊழியர்கள். ஏனெனில், எந்த நேரத்திலும் களத்தில் இறங்கத் தயார் நிலையில் இருப்பவர்கள் இவர்களே. ஆனால், இவர்கள் நடந்தே தான் சென்று பணியாற்ற வேண்டும். தற்காப்பு ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை; வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை; யானைகள் அதிகம் உலவும் முதுமலை, சத்தியமங்கலம் போன்ற காடுகளில் இவர்களது பணிச்சுமை அதிகம். ஆயினும், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாகுபாடும் இல்லை. இவர்கள் மேற்கொள்ளும் ஆபத்திற்கு தக்க சன்மானம் இல்லை!இவற்றுக்கெல்லாம் 2020ஆம் ஆண்டில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.- சு.சந்திரசேகரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !