வெள்ளை மனசுக்காரி
பட்டாணி உப்புக்கொத்தி ஆங்கிலப் பெயர்: Little Ringed Plover (லிட்டில் ரிங்கட் ப்ளோவர்)உயிரியல் பெயர்: 'Charadrius Dubius' (காராடிரியஸ் டுபியஸ்)வேறு பெயர்கள்: சின்னக் கோட்டான்பழுப்பு நிறப் பறவை வகைகளைக் குறிக்கும் 'காராடிரிடே' (Charadriidae) குடும்பத்தைச் சேர்ந்த உப்புக்கொத்திப் பறவை. மிகச் சிறியதாக இருக்கும். இதன் நீளம் 15 செ.மீ. மட்டுமே. கண்களைச் சுற்றி இருக்கும் மஞ்சள் நிற வளையத்தை வைத்து இதை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். உடலும், இறக்கைகளும் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்புப் பகுதி வெண்மை. அலகு மிகச் சிறியது. ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். குளம், ஏரி, நீர்நிலைகள் அருகில் உள்ள இடங்கள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றை வாழிடமாகக் கொண்டவை. சின்னக் கால்களுடன், குடுகுடுவென ஓடும். சட்டென்று நின்று இரையைக் கொத்தி உண்ணும். பிறகு சின்ன இறக்கைகளை உயர்த்தி தரையை ஒட்டியவாறே பறந்து சென்றுவிடும். ஓய்வெடுக்கும் போது ஒரு காலை மடக்கிக்கொண்டு ஒற்றைக்காலில் நிற்கும். இவை குழுவாகத் திரியும் இயல்பு உடையவை. சேற்றுப் பகுதிகளில் உள்ள புழுக்கள், பூச்சிகள், சிறு நண்டுகள் போன்றவையே உண்ணும். இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்ந்து வலசை செல்லும் இயல்புடையவை. புற்கள் நிறைந்த திறந்தவெளிப் பகுதியில் சிறு கற்களைக் குவித்து அதன் மீது முட்டை இடும். ஆண், பெண் இரு பறவைகளும் முட்டைகளை அடைகாக்கும். முட்டைகள் 25 நாட்களில் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இந்தப் பறவை இனம் பரவலாகக் காணப்படுகிறது.- கி.சாந்தா