உள்ளூர் செய்திகள்

டைனோசரை வரைந்தது யாரு?

டைனோசர் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்? “மிகப் பிரமாண்டமானதாக, மிக உயரமாக, நான்கு கால்களுடன் இருக்கும். ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் ஹீரோவே டைனோசர்தான்...” இப்படியெல்லாம் சொல்வீர்கள் தானே?நாம் பிரமித்துப் பேசும் டைனோசர், நம் சமகாலத்து உயிரினமே அல்ல. சுமார் அறுபத்தியாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டது. ஆனால், டைனோசர் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு எப்படி வந்தோம்? அதன் சித்திரத்தைப் பார்த்துத்தான்.சித்திரம் என்றவுடன் பெயின்ட், பிரஷ் கொண்டு ஒரு அனுமானத்தில் டைனோசர் வரையப்பட்டிருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.உருவகப்படுத்தி வரையப்பட்ட விலங்கினங்கள்பேலியோஆர்ட் (Paleoart) என்கிற அறிவியல் கலையின் அடிப்படையில்தான் டைனோசர் வரையப்பட்டது. டைனோசர் மட்டுமல்ல, மற்றுமொரு அழிந்துபோன விலங்கான “மேமூத்” என்று சொல்லக்கூடிய உடலெல்லாம் முடிகள் நிரம்பப்பெற்ற யானை போன்ற விலங்கினமும் இந்தப் பேலியோஆர்ட் மூலமாகவே வரையப்பட்டது. அறிவியல் புரிதலோடு பேலியோ ஆர்ட் என்பது, பூமியில் அழிந்துபோன விலங்கினங்களின் சித்திரங்களை அறிவியல் அடிப்படையில் துல்லியமாக வரைவது. இந்தக் கலை மிகக் கடினமானதும் சவாலானதும் கூட. இந்தச் சித்திரங்களை வரைபவர்கள், வெறும் வரையும் திறன் மட்டும் பெற்றிருந்தால் போதாது. உடற்கூறியல், விலங்கியல் குறித்த புலமை மற்றும் சூழலியல் குறித்த அறிவு, அறிவியல் தகவலைச் சித்திர வடிவில் சரியாகச் சித்தரிக்கும் திறன் போன்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்களின் அறிவியல் முடிவுகளை அறிவியல்பூர்வமாக நம்பகமான ஓவியங்களாக வரைவதற்குப் பெயர்தான் பேலியோஆர்ட்.இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னவென்றால், இந்தப் பூமியை விட்டு அழிந்துபோன விலங்கினங்களின் ஓடுகள், கூடுகள், எலும்புகள் போன்றவை எப்பொழுதுமே முழுதாகக் கிடைக்காது. பல சமயங்களில் துண்டுகளாகக்கூட கிடைக்கலாம். அப்படித் துண்டுகளாகக் கிடைத்தால், அதை வைத்து ஓர் உயிரினத்தை வரைவது இன்னும் சவாலாகப் போய்விடும். இந்தச் சவாலான பணியைத்தான், அறிவியல் அறிஞர்களுடன் இணைந்து பேலியோஆர்ட்டிஸ்டுகள் செய்கிறார்கள்.அழிந்துபோன விலங்குகள் பார்ப்பதற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை மட்டும் சொல்லாமல், எந்தெந்தச் சூழ்நிலைகளில் அந்த விலங்குகள் வாழ்ந்திருக்கும் என்பதையும், அதாவது வேட்டையாடுவது, பதுங்குவது, புல் மேய்வது, குட்டி போடுவது போன்ற அந்த விலங்குகளின் தினசரி வாழ்க்கை சார்ந்த பல நிகழ்வுகளையும் பேலியோஆர்ட்டிஸ்டுகள் தத்ரூபமாகப் பதிவு செய்கிறார்கள்.மொத்தத்தில் அழிந்துபோன விலங்குகள் குறித்து எதிர்காலச் சந்ததிகள் அறிந்துகொள்ள, நிகழ்காலத்தில் வேலைசெய்து வருகின்றனர் இந்த ஓவியர்கள்.- கவிதாகிடைக்கும் படிமங்கள் மற்றும் எலும்புகள், கூடுகள் போன்றவற்றைக் கொண்டு குறிப்பிட்ட விலங்கு எங்கு, எப்போது வாழ்ந்திருக்கும்? என்ன சாப்பிட்டிருக்கும்? தன் இரையை அது எப்படிப் பெறும்? அல்லது மற்ற விலங்குகளை எப்படித் தனக்கு இரையாக்கும் என்பது குறித்த முழுத்தகவல்களை அறிவியல்பூர்வமாக உறுதிசெய்து கொண்டுதான் பேலியோஆர்ட்டிஸ்டுகள் வரைய ஆரம்பிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !