உள்ளூர் செய்திகள்

ஆதன் தந்தை யார்?

கதை, கவிதை, கட்டுரை எந்தப் புத்தகமாக இருந்தாலும், அதில் 'முன்னுரை' என்ற பகுதி, நூலின் முதலில் இருக்கும். அந்தக் காலத்தில் அது, 'பாயிரம்' என்று சொல்லப்பட்டது. நூல் பற்றிய குறிப்புதான் பாயிரம்.எட்டுத்தொகை நூல்களில் ஒன்று ஐங்குறுநூறு. அந்த ஐங்குறுநூறு நூல் பற்றிய குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.ஐங்குறுநூறு: நூறு நூறாக, ஐந்து நூறு பாடல்களைக் கொண்டது. ஐந்து நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்கள் குறித்துப் பாடப்பட்டுள்ளது.ஓரம்போகியார், இந்நூலில் மருதம் பாடியவர். இவருக்கு ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் என்ற வேறு பெயர்களும் உண்டு. தன்னை ஆதரித்த அரசர்களின் பெயர்களை பாடல்களில் வைத்துப் பாடியுள்ளார். அப்படி இவர் பாடிய அரசர்கள், ஆதன் அவினி, கடுமான் கிள்ளி போன்றோர்.அம்மூவனார், நெய்தலில் நூறு பாடல்களைப் பாடியவர். இவரது இயற்பெயர் மூவன். சேர, பாண்டிய அரசர்கள் இருவரையும், காரி என்னும் அரசரைப் பற்றியும் பாடியுள்ளார்.குறிஞ்சி கபிலர் பாடியது. குறிஞ்சிக்கோர் கபிலர் என்று இவர் போற்றப்படுகிறார். இவர், பாரி உட்பட நிறைய அரசர்களைப் பற்றி பாடியுள்ளார்.ஓதலாந்தையார், பாலை பாடியவர். இவரது இயற்பெயர் 'அதன் தந்தை'. ஆதன் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இது திரிந்து, 'ஆந்தை' என்றும் அழைக்கப்பட்டார். இவரை ஆதரித்த அரசர்கள் பற்றி, பாடல்களில் குறிப்புகள் இல்லை.முல்லையில் நூறு பாடல்களைப் பாடியவர் பேயனார். இவரது இயற்பெயர் பேயன். இவர் பாடல்களிலும், அரசர்கள் பற்றிய பெயர்கள் இல்லை.ஐந்து திணைகளையும் பாடியவர்கள் அதில் திறன்மிகுந்தவர்கள். நூறு பாடல்களும் பத்துப் பத்தாக, ஒவ்வொரு தலைப்பின் கீழ் அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !