சில வருடங்களுக்கு முன்பாகசென்னை தெருக்களில் சைக்கிளில் சென்று துணி வியாபாரம் செய்து வந்த ஒரு தந்தையின் கனவு முழுவதும் தனது மகன் விக்னேைஷ படிக்கவைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.வெயிலில் அலையும் தன் தந்தையின் வேர்வைக்கு தான் செலுத்தும் காணிக்கை என்பது படிப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று விக்னேஷ்ம் முடிவெடுத்தார்.அதே போல படித்தார்,பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்தார்.அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த போதுதான் ஏழை மாணவர்களை உயர்கல்வி படிக்கவைக்கும் ஆனந்தம் அறக்கட்டளை உதவிக்கு வந்தது.
மாணவன் விக்னேேஷ நேர்காணல் செய்து அவரது மதிப்பெண்ணுக்கு, லட்சியத்திற்கு என்ன படிக்கவைக்கலாம் என்று அலசி ஆராய்ந்து நல்லதொரு பொறியியல் கல்லுாரியில் படிக்கவைத்தனர்.படித்து முடித்ததும் வேலை காத்திருந்தது, வேலையில் சேர்ந்தார் படிப்படியாக உயர்ந்தார் இன்று வருடத்திற்கு 40 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் இளைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.பெற்றோருக்கு சொந்த ஊரில் சொந்த வீடு கட்டிக் கொடுத்து, அவர்கள் அமைதியாக ஆனந்தமாக வாழ வழிவகை செய்துள்ளார்.இவர்களைப் போலவே கிராமத்தில் பெரும் சிரமப்பட்டு படித்த மாணவ,மாணவியர்களை அடையாளம் கண்டு, அவர்களை படிக்கவைத்து, உயர்ந்த வேலையில் அமரவைத்து அழகுபார்க்கும் ஆனந்தம் அமைப்பு இப்படி வருடத்திற்கு நுாற்றுக்கணக்கான மாணவர்களை நல்லதொரு சமுதாயத்திற்கு அர்ப்பணித்து வருகிறது.இந்த வருடம் புதிதாக படித்துவரும் மாணவர்களுக்கு உற்சாகம்தரும் வகையில், விக்னேஷ் போன்ற படிப்பில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற்ற பழைய மாணவ,மாணவியரை அழைத்து பேச வைக்கும் ஆனந்தம் வெற்றியாளர்கள் விழா சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.மாணவ,மாணவியருடன் தன்னம்பிக்கை பேச்சாளர்களும்,நன்கொடையாளர்களுமான சத்யமூர்த்தி,ராஜமோகன்,ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன்,ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார் ஆகியோரும் பேசினர்.இத்தனைக்கும் காரணகர்த்தவான ஆனந்தம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் செல்வகுமார் ஒரு ஓரத்தில் நின்றபடி மாணவச் செல்வங்கள், மதிப்புறு இளைஞர்களாக வலம்வருவதை அவர்கள் வாயாலேயே சொல்வதைக் கேட்டு மகிழ்ந்து புன்னகை பூத்தபடி இருந்தார்.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷாலினி முதல் அனைவரும் இதனை குடும்பவிழா போல கலகலப்பாக கொண்டு சென்றனர்.நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வீண் வார்த்தை ஜாலம் காட்டுவதைவிட, இதுதான் எங்கள் செயல், இவர்கள்தான் எங்கள் வெற்றியின் அடையாளங்கள் எனக்காட்டியதுதுான் ஆனந்ததத்தில் சாதனை.,வாழ்த்துக்கள்.-எல்.முருகராஜ்