UPDATED : பிப் 10, 2024 06:51 PM | ADDED : பிப் 10, 2024 06:33 PM
கொடைக்கானல்,ஊட்டி போன்ற இடங்களில் நடத்தப்படும் மலர்க்கண்காட்சியை சென்னை வாசிகளும் காண்பதற்கு ஏற்ற வகையில் செம்மொழிப்பூங்கா வளாகத்தில் மலர்க் கண்காட்சி நடந்து வருகிறது.தமிழக வேளாண்மைத்துறையும்,தோட்டக்கலைத்துறையும் இணைந்து கடந்த வருடம் நடத்திய இந்த மலர்க்கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் அடிப்படையில் இந்த வருடமும் நடத்துகின்றனர்.செம்மொழிப்பூங்கா என்பது எட்டு ஏக்கர் பரப்பளவே கொண்ட சிறிய பூங்காதான் இந்தப் பூஙகாவிற்குள் அரிய வகை தாவரம்,மரங்கள் வளர்த்து வருகின்றனர்.
இதற்குள் மலர்க்கண்காட்சியை திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர்.ஊட்டி,கொடைக்கானல்.கிருஷ்ணகிரி உள்ளீட்ட மலர்களுக்கு பிரபலமான ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 12 லட்சம் மலர்களைக் கொண்டு கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
யானை,அன்னம்,கப்பல்,பழங்கால கார் போன்ற வடிவங்களை மலர்களைக் கொண்டே அலங்கரித்துள்ளனர்.மாலை நேரம் பார்வையாளர்களை வரவேற்க கலை நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.விதவிதமான மலர் அலங்கார வளைவுகளும் பார்வையாளர்களை மயக்குகின்றன.ஊட்டி போன்ற மலைப் பிரதேசத்தில் மலர்கள் வாடாமல் இருக்கும், சென்னை போன்ற சூடான இடத்தில் ஒரிரு நாளில் மலர்கள் வாடிவிடுமே என்ற நம் சந்தேகத்திற்கு விடைதரும் வகையில் மலர்ச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி குளுமை படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.எல்லாம் சரிதான் ஆனால் நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 150 ரூபாயும்,சிறியவர்களுக்கு 75 ரூபாயும்,கேமரா கொண்டு சென்றால் 500 ரூபாயும் கட்டணமாக வசூலிப்பது அதிகமாக தெரிகிறது.இது போன்ற இயற்கையைப் போற்றும் விஷயங்களை சிறியவர்கள் மனதில் பதியவைக்கவேணடும் என்றால் இவ்வளவு கட்டணம் வைத்தால் குடும்ப பட்ஜெட் இடம் தராது என்பதால் நுழைவுக்கட்டணத்தை குறைக்க வேண்டும்.படங்கள்:சுரேஷ் கண்ணன்.