தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வந்த போது தொண்டர்கள் வெளிப்படுத்திய 'உற்சாகத்தால்' மக்கள் மிரண்டு போயினர்.உதயநிதியை வரவேற்று கொடிக்கம்பம் நடவேண்டும் என்பதற்காக, நன்றாக இருந்த ரோட்டில் இஷ்டத்திற்கு குழிபோட்டனர்.பகலில் இருந்தே ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தவர்கள், இரவில் உதயநிதி வரும் நேரம் நெருங்க நெருங்க தங்களது ஆட்டம் பாட்டத்தை அதிகரித்துக் கொண்டே சென்றனர்,பலருக்கு எப்படித்தான் வேட்டி இடுப்பில் நின்றதோ.?
அந்த நேரம் அந்த வழியாக சென்ற இங்கிலாந்து நாட்டுப் பயணி ஒருவரை 'உற்சாக' மிகுதியில் நிறுத்தி, அவருக்கு ஒரு கட்சிக்கலர் துண்டு போர்த்தி உறுப்பினர் கார்டும் கொடுத்து ஆரவாரம் செய்தனர்.
இவ்வளவு ஏற்பாடு செய்தும் கடைசியில் உதயநிதி வரும்போது நேரம் இரவு பத்துமணியைக் கடந்து விட்டிருந்தது, இதன் காரணமாக தனது கைக்கெடியாரத்தைக் காண்பித்து வெறுமனே சைகை மொழியில் பிரச்சாரம் செய்துவிட்டு உதயநிதி பறந்தார்.
அவரும் பேசினாலும் சரி பேசாட்டியும் சரி எங்களுக்கு 'பேசுன'காசு கொடுங்க என்று பெண்கள் கூட்டத்தில் இருந்த சலசலப்பு வர, உடனே சுடச்சுட அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு சலசலப்பு நிறுத்தப்பட்டது.
எல்லாம் முடிந்தபிறகும் உற்சாகம் குறையாத தொண்டர் ஒருவர் துாணில் சாய்ந்து நின்றபடி, 'இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா' என்று வாய்க்குழறியபடி பேச, 'இதுவே ரொம்ப அதிகம் வாப்பே போகலாம்' என்று அவருடன் கூட வந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.படங்கள்:வனராஜ்-எல்.முருகராஜ்