UPDATED : மார் 03, 2024 09:34 AM | ADDED : மார் 03, 2024 09:32 AM
ராணிப்பேட்டை அருகே திமிரி பகுதியை சேர்ந்தவர் க.மணி எழிலன். இவர் 2021ல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது காலை இழந்தவர். ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் கடலுக்குள் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றார். டெம்பிள் அட்வென்சர்ஸ் ஸ்கூபா பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ இவரது பயிற்சியாளர்.மணி எழிலன் ஒரு எழுத்தாளரும் கூட. மலர்கண்ணன் பதிப்பகம் என்ற பெயரில் பல நுால்களை வெளியிட்டுள்ளார். நான் உங்கள் கவிஞன், விரல்கள் சிக்காத ஓவியம், சந்தியா வந்தனம் உட்பட 9 புத்தகங்களை எழுதியுள்ளார்.மணி எழிலன் கூறியதாவது: கடலுக்கு அடியில் இயற்கையை ரசிக்கும் நோக்கத்திற்காகவே ஸ்கூபா டைவிங் பயிற்சி எடுத்துக்கொண்டேன். கடலுக்கு அடியில் இயற்கையை ரசித்த நான் அந்த ஆழ்கடலிலேயே சாதனை படைக்க விரும்பினேன். திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதும் நான் அந்த பணியை ஆழ்கடலில் செய்ய தோன்றியது.பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீயுடன் ஆலோசனை செய்தேன். அதன் பிறகு கடலில் 60 அடி ஆழத்தில் 'மையம்' என்ற பெயரில் சினிமா கதை சுருக்கத்தை எழுதி அதனை வெளியிடலாம் என முயற்சித்தேன். மையம் என்ற பெயரிட காரணம், கடலில் உருவாகும் புயல், புயலுக்குப்பின் ஒரு நீண்ட அமைதி. அதே போல் தேர்தலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் ஒரு புயல். அந்த தேர்தல் முடிந்தவுடன் ஒரு அமைதி, என தேர்தலை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கினேன்.அதனை சென்னை அருகே நீலாங்கரை கடலில் 6 கி.மீ.,ல் 60 அடி ஆழத்தில் சென்று வெட் புக்கில் (தண்ணீருக்குள் எழுத பயன்படும் நோட்டு) 16 பக்கங்கள் எழுதி அதனை வெளியிட்டேன். கடலுக்கு அடியில் வெளியிடும் போது அது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் இந்த சாதனை முயற்சி வெற்றியும் பெற்றது.
இதனை தவிர எனது பதிப்பகம் மூலம் 406 புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளேன்.70 பெண் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளேன். ஒரே நேரத்தில் 119 நுால்களை அறிமுகம் செய்துள்ளேன். ஒரே நேரத்தில் 33 எழுத்தாளர்களின் நுாறு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். என்னுடைய நீண்ட நாள் கனவு திரைத்துறையில் சிறந்த கதைக்களம் கொண்ட காதாசிரியராக வர வேண்டும் என்பதே.அதே போல் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுாறு எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்றார்.
இவரை பாராட்ட... 98846 02541