மேலும் செய்திகள்
நாரதர் பேச்சு நன்மைக்கே!
28-Sep-2025
கொங்கு தேன் சுவைத்தேன்!
27-Sep-2025
மிஸ் தமிழ்நாடு கிறிஸ்லின் இமிமா
21-Sep-2025
கல்லிலே ஓவியம் கண்ட ரத்தினம்
21-Sep-2025
இசையால் இவ்வுலகை வசமாக்கும் இசை மகள்... ஸ்வரங்களில் சுவாரஸ்யம் காட்டும் கலைமகள். இவர் வீணைக்காக விரல் மீட்டினால், மனித மனங்களை மென்மையாக்கி தென்றலாக வீசும் அந்த இசை. 13வது வயதிலேயே தொடர்ந்து 15 மணி நேரம் வீணையை இசைத்து 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்றவர். மத்திய அரசின் 'பாலசக்தி புரஸ்கார்', தமிழக அரசின் 'கலை இளமணி' விருது பெற்றவர். பத்தாண்டிற்கும் மேலாக தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வீணை இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கும் 25 வயதான வீணை நாயகி கே.ஸ்ரீநிதி மனம் திறக்கிறார்.* உங்களைப் பற்றி...
கரூரில் பிறந்தேன். பெற்றோர் கார்த்திகேயன் - கல்பனா ஊக்கத்தால், சிறுவயது முதலே வீணை, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் என இசை சார்ந்த துறைகளில் பயிற்சி பெற்றேன். 15 ஆண்டுக்கும் மேலாக வீணை இசைக்கலைஞராக வலம் வருகிறேன். பி.ஏ., பட்டம் பெற்று, தற்போது இசையில் இளங்கலை பட்டம் பெற படிக்கிறேன்.* வீணை இசையில் தனித்துவம் எப்படி
“மகத்தான மனிதர்களின் தோள்களில் ஏறித்தான் உயர்வான விஷயங்களைப் பார்த்தேன்' என்பார் ஐசக் நியூட்டன். எனது முதல் குரு பிரபாவின் வீணை இசை பயிற்சியுடன் தொடங்கியது கற்றல் அனுபவம். ஸ்ரீரங்கம் செங்கமலத்திடம் பயிற்சி பெற்றேன். திருச்சி வீணை இசைக்கலைஞர் மறைந்த சிவக்குமாரின் வழிகாட்டுதலுடன் வீணை இசை நுட்பத்தை கற்றேன். திருச்சி ஜே.வெங்கட்ராமனிடம் வாய்ப்பாட்டு பயிற்சி பெற்றேன். * சாதிக்க நினைக்கும் விஷயம்...
ஒவ்வொரு இசைக்கலைஞரின் நோக்கமும் தான் கற்றறிந்த இசையின் ஆழத்தை, நாதவடிவில் வெளிப்படுத்தி மனித மனங்களை ஆறுதல் அடைய செய்வதே. அப்படி ஒரு மனதையேனும் இசையின் மூலம் ஆற்றுப்படுத்த முடிந்தால் அதைத்தான் சாதனையாகக் கருதுவேன்.* மறக்கமுடியாத அனுபவங்கள்...
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 3 ஆண்டு வசித்தேன். அட்லாண்டா தமிழ் சங்கத்தில் வீணை வாசித்த அனுபவமும், டில்லி தமிழ் சங்கத்தில் நிகழ்த்திய கச்சேரியும் சிறந்த அனுபவமாக கருதுகிறேன்.* வீணை நாதத்தில் திரையிசை எப்படி
எல்லா வித இசையும் மகத்துவம் நிறைந்தது. மக்கள் திரையிசைப் பாடலில் பெரும்பாலும் உணர்வுபூர்வமாக லயிக்கிறார்கள். 'கொஞ்சி பேசிட வேணாம்... கண்ணே பேசுதடி...' போன்ற ஏராளமான திரைப்பட பாடல்களை வீணையில் இசைத்துள்ளேன்.* ரசிகர்களுக்கு வழங்க நினைப்பது...
“கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்கிற வள்ளுவனின் வாசகத்தைப் போல, கேட்காதவர்களும் கேட்டு ரசிக்கத் துாண்டும் வகையில் இசையை அதன் ஒழுங்குகளோடு தருகிறோம். நிகழ்த்து கலையான வீணை இசை கச்சேரியை நல்ல ஒலியமைப்பில், கொடுக்கும்போது, நல்ல காபியை அருந்திய பின் நினைவில் நிற்கும் அதன் சுவையைப் போன்று, நாம் கேட்கிற ஒலியின் இன்சுவை, இசையாக மனதில் படியவேண்டும். அப்படி ஓர் உணர்வுபூர்வமான, துல்லியமான இசையை, துல்லியமான ஒலியமைப்போடு தர ஆசைப்படுகிறேன்.* உங்கள் எதிர்கால திட்டங்கள்....
'இசை தான் ஒரே உண்மை' என்பார் ஜாக் கெரோக். அந்த உண்மையின் ஒளிக்கீற்றுகளை எனக்கும் அருளியிருக்கிறது இந்த வாழ்க்கை. இந்த ஒளியை அடுத்த தலைமுறைக்கும் அளிக்க விரும்புகிறேன் என்றார்.
28-Sep-2025
27-Sep-2025
21-Sep-2025
21-Sep-2025