திறமைசாலி
புத்திசாலி மந்திரி ஒருவர் இருந்தார். மன்னருக்கு அவர் மீது மதிப்பு அதிகம். மந்திரிக்கு தம்பி ஒருவர் இருந்தார். விவசாயியான அவர் உழைப்பு இன்றி அண்ணன் நிறைய சம்பாதிக்கிறானே என எண்ணினார். “ கொஞ்ச நாள் நீ விவசாய வேலையைப் பார். எனக்கு மந்திரி பதவி வாங்கிக் கொடு” எனக் கேட்டார். மன்னரிடம் சிபாரிசு செய்து தம்பியை மந்திரியாக்கினார். அன்று மாலையில் அரண்மனை வழியாக பாரம் ஏற்றியபடி மாட்டு வண்டிகள் சென்றன. 'எத்தனை வண்டி போகிறது?' என புதிய மந்திரியிடம் கேட்டார் மன்னர். ஓடிப் போய் பார்த்து விட்டு, '10 வண்டி போகிறது மன்னா' என்றார்.'வண்டியில் என்ன இருக்கிறது?' எனக் கேட்டார் மன்னர்.பதில் தெரியாததால் மீண்டும் போய் கேட்டு விட்டு, 'நெல் மூடை போகிறது' என்றார்.'மூடை என்ன விலை?' என மன்னர் கேட்க திரும்பவும் போய் கேட்டு வந்தார். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் தகவல் கேட்டு வர வேண்டியிருந்தது. இந்நிலையில் மந்திரியின் அண்ணன் வேறு வேலையாக மன்னரைக் காண வந்தார். அவரிடம், 'அரண்மனை வாசலில் வண்டி போகிறதே பார்த்தீரா...' என்று வேடிக்கையாக கேட்டார் மன்னர். அதற்கு அவர், “ மன்னா... பத்து மாட்டு வண்டிகள் அரண்மனையை கடந்து சென்றன. அதில் 200 நெல் மூடைகள் உள்ளன. விவசாயிகள் விற்பனைக்காக எடுத்துச் செல்கிறார்கள்” என்றார் ஒரே மூச்சில். திறமைசாலியான தன் அண்ணனின் பதிலைக் கேட்ட தம்பி சிலை போல நின்றார். இந்த உலகிற்கு நம்மை அனுப்பும் போதே இன்ன விஷயத்துக்கு இவர் தகுதியானவர் என தலையில் எழுதி அனுப்புகிறார் ஆண்டவர். அவரவருக்கு விதிக்கப்பட்ட பணிகளில் ஈடுபட்டால் போதும்... நலமுடன் வாழலாம்.