உள்ளூர் செய்திகள்

நீ கொடுக்கும் பரிசு

ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் துாங்கிக் கொண்டிருந்தான். அதை கவனித்த ஆசிரியர், ''ஏன் இப்படி செய்கிறாய்? படிப்பில் உனக்கு ஆர்வம் இல்லையா..'' என்று கேட்டார். ''அப்படி எல்லாம் இல்லை சார். நான் நேற்று இரவு மூட்டை துாக்கும் வேலைக்கு சென்றதால் கொஞ்சம் அசந்து துாங்கிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்றான். ''ஏன்... வீட்டில் கஷ்டமா'' எனக்கேட்டார். ''இல்லை. என் அப்பா தினமும் அந்த வேலையைத்தான் செய்கிறார். அடிக்கடி அவர், 'நான் பார்க்கும் வேலை கடினமானது. உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். நன்றாக படி' என அறிவுரை கூறுவார். அப்படி அந்த வேலையில் என்னதான் கஷ்டம் உள்ளது என தெரிந்து கொள்ள நேற்று இரவு அங்கு சென்றேன். மழை வேறு அப்போது பார்த்து கொட்டியது. அதில் என் அப்பா வேலை செய்வதை பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது'' என அழுதான். ''தம்பி! உன் அப்பா மட்டும் அல்ல. பெற்றோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். பாவம்! சில குழந்தைகளுக்கு அது தெரிவதில்லை. கவலைப்படாதே. நன்றாக படி. அதுதான் உன் அப்பாவின் உழைப்பிற்கு, நீ கொடுக்கும் பரிசாகும்'' என தெரிவித்தார் ஆசிரியர்.