உலகெங்கும் தீபாவளி
உலகம் எங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதிகாசம், புராணங்களுடன் வரலாறு ரீதியான காரணம் இதற்குண்டு. * ராவணனை வதம் செய்த ராமர், சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளி. 14 ஆண்டுக்குப் பிறகு ராமரை தரிசித்த அயோத்தி மக்கள் அவரை வரவேற்கும் விதமாக வீடுகளில் தீபமேற்றினர். அயோத்தி அரண்மனை எங்கும் தீபம் ஏற்றி சீதையும் வழிபட்டாள்.* சீக்கிய மதகுரு கோவிந்த்சிங் மொகலாய மன்னர் ஜஹாங்கீரால் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் 52 ராஜபுத்திர மன்னர்களும் சிறையில் இருந்தனர். சாதுர்யமாக செயல்பட்ட மதகுரு தான் தப்பியதோடு, 52 மன்னர்கள் தப்பிக்கவும் துணை நின்றார். அவர்களை வரவேற்கும் விதத்தில் சீக்கியர்கள் பொற்கோயில், வீடுகள் எங்கும் தீபமேற்றி மகிழ்ந்தனர். * மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைன மதத்தினர் தீபாவளியை கொண்டாடுகின்றனர். அதற்காக விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து நல்லறிவும், ஞானமும் ஏற்பட வேண்டும் என வழிபடுகின்றனர்.* 'லாய் கரடாங்க்' என்னும் பெயரில் தாய்லாந்தில் கொண்டாடப்படுகிறது. வாழை இலையில் தொன்னை செய்து அதில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, ஏற்றி வைத்து நீரில் மிதக்க விடுவர். இதன் மூலம் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என அவர்கள் நம்புகின்றனர்.* சீனாவில் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பதோடு, வீட்டுக் கதவுகளில் 'வாழ்க வளமுடன்' 'வளம் பெருகட்டும்' என்னும் வாசகங்களை எழுதி வைப்பர். இந்நாளில் புதுக்கணக்கைத் தொடங்குவர். * ஜப்பானில் 300 ஆண்டுக்கும் மேலாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். இங்கு இதை 'டோரோனாகாஷி' என்பர். முன்னோர்களை வரவேற்கும் விதத்தில் விளக்கேற்றுவர்.