சொல்லடி அபிராமி (14) - அம்பிகை பக்தனின் கதை
“எவருக்கு கடைசி பிறவி வாய்க்கிறதோ அவர்களே அம்பிகையின் வித்யாவடிவினை அறிந்துகொள்கின்றனர். அவள் துர்க்கையாக, லட்சுமியாக, சரஸ்வதியாக மூன்று வடிவம் தாங்கியவள். காளிதாசர் தன் சியாமளா தண்டகத்தில் குறிப்பிடும் ஒரு கருத்தை நாம் உற்றுநோக்க வேண்டியது அவசியம்.அதாவது எவனொருவன் அம்பிகையை பேரழகு பொருந்திய, பச்சை நிறமேனியுடைய சியாமளா ரூபத்தில் சந்திரப்பிறை அணிந்த கோலத்தில் தியானிக்கின்றானோ, அவனுக்குக் கடலும் விளையாடும் குளமாகும். சகலகலா ஞானங்களும் அவனுக்கு கைவசமாகும். திருமகளின் திருவருள் வந்து வாய்க்கும்.ஒருசமயம் அன்னை லலிதாம்பிகை தன் பரிவாரங்கள் புடைசூழ வந்து அரியணையில் அமர்ந்தாள். சபையே ஆரவாரம் அடங்கி அமைதியாக இருந்தது. லலிதையின் இருமருங்கிலும் சரஸ்வதியும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். சரஸ்வதி தனது கச்சபீ வீணையை எடுத்து இனிய நாதம் மீட்டினாள். உடனே அனைத்து தேவர்களும் மெய்மறந்தனர். அப்போது சரஸ்வதி வீணை மீட்டுவதை நிறுத்தி விட்டு லலிதாம்பிகையைப் பார்த்துக் கேட்டாள்.'தேவி! என் வீணையின் இசை எப்படியிருந்தது?'அன்னை லலிதா பரமேஸ்வரி மெல்லத் தன் பூவிதழ் திருவாய் மலர்ந்து, 'சரஸ்வதி! உன் வீணையின் நாதம் அமிர்தமாய் இனித்தது' என்று புகழ்ந்துரைத்தாள். அப்போது அன்னையின் குரல் இனிமை சரஸ்வதியின் வீணை நாதத்தைக் காட்டிலும் இனிமையாக ஒலித்தது. அந்த குரலின் இனிய காந்தம் போன்ற கவர்ச்சியில் அண்டசராசரமும் ஒருகணம் அசையாமல் நின்றது. இதை உணர்ந்த சரஸ்வதி ஓடோடி வந்து அன்னையைப் பணிந்தாள். இந்த தேவ நிகழ்வின் வெளிப்பாடாகவே இப்பாடலின் 'பண்ணளிக்கும் சொல் பரிமளயாமளைப் பைங்கிளியே' என்று அன்னையை வர்ணித்தேன். லலிதா சகஸ்ரநாமத்தில், 'நிஜ ஸல்லாப மாதுர்ய விதிர்பாத்ஸித கச்சபீ' என்று வருகிறது. அதன் பொருள், தன் சொல்லின் இனிமையால் சரஸ்வதி தேவியின் கச்சபீ விணையின் இசையைத் தோற்கடித்தவள் என்பதாகும். இதில் 486வது ஸ்லோகத்தில் 'நாமா சியாமாபாயை நம' என்று அம்பிகை பச்சை கலந்த கருப்பு வண்ணமயமானவள் என்று போற்றுகிறது. 'யாமளை' என்ற சொல்லுக்கு என்றும் இளமை பொருந்தியவள் என்ற பொருளும் உண்டு,” என்று அபிராமபட்டர் விளக்கம் கூற, அவையோர் ஆனந்தத்தில் திளைத்தனர்.இதையடுத்து “கிளியே! இளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!” என்று பாடிய பட்டர் அதற்கு விளக்கமளித்தார்.“கிளியே! பக்தர்கள் மனதில் என்றும் ஒளிரும் ஒளியே! அந்த ஒளி பரவும் இடமாக இருப்பவளே! எல்லையற்று விரிந்த வெளியாகத் தோன்றி ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய பஞ்சபூதங்களின் வடிவாக மலர்ந்த என் தாயே! இவ்வளவு மகத்துவம் வாய்ந்த நீ அடியேனது சிறிய மனம் புரிந்துகொள்ளும் அளவிற்கு உன்னைக் குறுக்கிக்கொண்டது உண்மையில் மாபெரும் அதிசயம்தான்” என்ற பட்டர் இதற்கான விளக்கத்தைச் சொன்னார்.“பனைமரம் எவ்வளவு நெடியது? ஆனால், நம் சிறிய கண்களால் அதனை முழுவதுமாகக் காண்கிறோம் அல்லவா? அதுபோலவே, மகத்தான அந்த அம்பிகை அவளது அருள்பெற்ற அடிகளாரது கண்களுக்கு அளவான உருவமாகத் தன்னை சுருக்கிக்கொண்டு காட்சி தருகிறாள். அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் (உடலில்) உள்ளது என்பது சித்தர்களின் வாக்கு. அவ்வண்ணமே அம்பிகை நம் சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிரகாசிக்கிறாள். இது குறித்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கூறுகிறேன். கேளுங்கள்,” என்றவர் சற்றே நிதானித்தார். மக்களின் ஆர்வம் அதிகரித்தது.சரபோஜி மன்னரும் தன் பொறுமையை விடுத்து “சுவாமி! அந்த அதிசயச் சம்பவம்தான் என்ன? விரிவாக கூற வேண்டுகிறேன்” என்றார். பட்டர் சிரித்தபடியே தொடர்ந்தார்.“முன்னொரு காலத்தில் வித்யாதரன் என்ற வேதம் படித்த இளைஞன் இருந்தான். அவனுக்கு அம்பிகையைக் காணவேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே அவன் ஆழ்ந்த வனப்பகுதிக்குள் தவமிருக்க சென்றான். ஒருநாள் காட்டுக்குள் நடந்த ஒரு சம்பவம் அவனை அதிசயத்தில் ஆழ்த்தியது. அடர்ந்த அந்த வனத்துக்குள் ஓரிடத்தில் பலமுனிவர்கள் ஒன்றுகூடி யாகம் செய்த காட்சியை கண்டான்.ஒவ்வொரு முனிவரும் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தந்தனர். ஒருவர் மொட்டை போட்டிருந்தார். சிலர் ஜடாமுடி தரித்திருந்தனர். நீண்ட தாடியுடன் சிலர் உடல் முழுவதும் விபூதி பூசிக்கொண்டு ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து கொண்டிருந்தனர். மெல்ல அவர்களை நெருங்கிய வித்யாதரன், சாதுவாகக் காணப்பட்ட ஒரு முனிவரை அணுகி. 'சுவாமி! தாங்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?'அந்த முனிவரும், 'மகனே! நாங்கள் எல்லோரும் அந்த ஆதிபராசக்தியை நேரில் காண வேண்டி தவமியற்றியும், வேவி செய்துகொண்டும் இருக்கிறோம்' என்றார்.அதைக் கேட்ட வித்யாதரன் உற்சாகம் பீறிட, 'முனிவரே! அடியேனும் அதே நோக்கத்துடன்தான் வனத்துள் அலைந்து கொண்டிருக்கிறேன். நானும் தங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா?' என்று வினவினான்.முனிவரோ, 'மகனே! உனக்கு குரு முகமாக மந்திர உபதேசம் ஆகியுள்ளதா?' என்று கேட்டார்.“இல்லை தவசீலரே! எனக்கு குரு என்று யாரும் இல்லை. மந்திர உபதேசமும் பெற்றுக்கொள்ளவில்லை,” என பதிலளித்த வித்யாதரனை ஆச்சரியம் மேலிடப் பார்த்த முனிவர் கூறினார், 'மகனே! குருவின் அருள் இல்லாமல் தேவியைக் காண முடியாது. எனவே நீ ஒரு குருவை நாடி மந்திர உபதேசம் பெற்றுக்கொள்வாயாக!” என்றார்.வித்யாதரனின் முகம் வாடியது. 'சுவாமி எனது குருவை நான் எங்கே காண்பேன்?' என வருத்தத்துடன் கேட்டான்.முனிவர், 'மகனே! அதோ தெரிகிறதே மலை உச்சி. அங்கே சென்று பார். அதிசயமான சக்திகள் மிக்க ஆதியோகி ஒருவர் அங்கே தவம் இயற்றி வருகிறார். அங்கே சென்று குரு உபதேசம் பெறுவாயாக' என்று ஆசீர்வதித்தார். வித்யாதரனும் அங்கே சென்றான்.அங்கு ஒரு யோகியைக் கண்டான். பணிவுடன், “சுவாமி! நான் அம்பிகை ஈஸ்வரியின் பக்தன். அவளை நேரில் காணவேண்டி பல காலமாக தவமியற்றி வருகிறேன். ஆனால், எனது முயற்சி பலனளிக்கவில்லை. வனத்தில் ஒரு தவசீலர் குரு உபதேசம் இருந்தால்தான் அம்பிகையைக் காண முடியும் என்று கூறினார். அவ்வண்ணமே குரு உபதேசம் வேண்டி தங்களிடம் வந்துள்ளேன்,” என்றான்.'அதற்கான வேளை வந்துவிட்டது மகனே! நாளை அதிகாலை அதோ அந்த அருவியில் குளித்துவிட்டு இங்கே வா. நாம் உனக்கு உபதேசித்து அருள்வோம்' என யோகி சொல்ல, வித்யாதரன் மகிழ்ந்தான்.மறுநாள் தனது அருட்கரத்தால் வித்யாதரனின் சிரசைத் தொட்ட யோகி, பிரணவ மந்திரமாகிய ஓம்காரத்தை அவனுக்கு உபதேசித்தார்.'ம்...ம்... திரும்பச் சொல்! ஓம்... ஓம்... ஓம்...' வித்யாதரனும் பிரணவத்தை மும்முறை திரும்பச் சொன்னான்.ஆதியோகி, “உனக்கு என் உபதேசம் இதுவே. எழுந்திரு,” என்றார்.வியப்பு மேலிட வித்யாதரன் கேட்டான். “சுவாமி! அவ்வளவு தானா? அம்பிகையை நேரில் காணும் அந்த அதிசயமான சக்தி மிக்க ரகசிய மந்திரத்தை எப்போது சொல்லித் தருவீர்கள்?”'மகனே! நீ கேட்கும் அந்த அதிசயமான சக்தி வாய்ந்த, ரகசிய மந்திரம் இதுவே! ஓம்! என்பதற்கு மேலான மந்திரம் ஏது? இதனையே தியானித்து வா. அம்பிகை காட்சியளிப்பாள்,” என்றார் முனிவர்.“இவர் என்ன இப்படி சொல்கிறார்? இவர் சொல்வது சரிதானா?”வித்யாதரனுக்கு ஏமாற்றமாக இருந்தது.இன்னும் வருவாள்- முனைவர் ஜெகநாத சுவாமி